கடனை தள்ளுபடி செய்யும் வரை போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு
சென்னை: விவசாய கடன் முழுதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நேற்று, சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்டவை சார்பில் நடந்த போராட்டத்தில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாநில பொதுச்செயலர் மாசிலாமணி கூறியதாவது: த.வெ.க.,வின் தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, விவசாயக் கடனில் பாதி, அதற்கு கீழ் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, கடன் முழுதும் தள்ளுபடி செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது, த.வெ.க., அரசு அமைந்துள்ள நிலையில், 75,000 ரூபாய் வரையிலான கடன்கள் முழுமையாகவும், அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு, 35,000 ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிபடி, நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாததால், கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளால் புதிய கடன் பெற முடியவில்லை.
இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயத்தை தொடர முடியாத நிலையில் உள்ளனர்.
த.வெ.க., தேர்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை, அனைத்து பகுதி விவசாயிகள், அனைத்து கட்சி பிரமுகர்களை இணைத்து, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.