குல்தீப் யாதவ் பற்றி கேள்வி கேட்டவுடன் கொந்தளித்த இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்
குல்தீப் யாதவ் பற்றி கேள்வி கேட்டவுடன் கொந்தளித்த இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கோபமாக பதிலளித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அனுபவ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்குப் பதிலாக 33 வயதான அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். குல்தீப் யாதவ் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்போட்டியில் விளையாடவில்லை என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்டிடம், "குல்தீப் உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்திருக்குமா?" என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியால் கோபமடைந்த சிதான்ஷு கோடக், "இது முற்றிலும் தேவையற்ற ஒரு கேள்வி என்று நான் நினைக்கிறேன். ஒரு வீரர் உடற்தகுதியுடன் இல்லாத போது, அவர் விளையாடுவாரா இல்லையா என்பதைப் பற்றி சிந்திப்பதில் என்ன பயன்? காலே டெஸ்டில் இருந்து கொழும்பு கிளம்பும் போதே அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. தற்போதைய சூழலில் அவர் விளையாடும் நிலையில் இல்லை. அப்படி இருக்கும் போது அவர் தகுதியுடன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிப்பது நியாயமற்றது" என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "குல்தீப்பின் உடல்நிலை தற்போது தேறி வருகிறது. மாலையில் நான் அவரைச் சந்தித்த போது நலமாக இருந்தார். இந்தப் போட்டியைப் பொறுத்தவரை எங்களுக்கு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையா அல்லது மூன்று ஸ்பின்னர்கள் தேவையா என்ற கேள்வி இருந்தது. இலங்கை அணியின் டாப் ஆர்டரில் 4 இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஒரு ஆஃப் ஸ்பின்னரை விளையாட வைப்பது தான் சரியாக இருக்கும் என நாங்கள் முடிவு செய்தோம்" என்றார்.
முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2026 ஆம் ஆண்டில் குல்தீப் யாதவ் பல தொடர்களில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.
2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே அவர் விளையாடினார். மேலும் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் இருந்தும் அவர் புறக்கணிக்கப்பட்டார். இந்த வரிசையில் தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் காய்ச்சல் அவருக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.