குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி
குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி எடுத்து பரவசம்!
"ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்."
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோவில் அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோவில் ஆகும். கச்சியப்பர் சிவாச்சாரியாரால் ஆன்மீகக் காவியமான கந்தபுராணம் அரங்கேற்றப்பட்ட பெருமைக்குரிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலத்தில், இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதிகாலை முதலே பணிக்குச் செல்லும் பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் என திரளானோர் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து முருகப்பெருமானை வழிப்பட்டு வருகின்றனர். ஆடி கிருத்திகையின் சிறப்பு நிகழ்வாக மூலவர் முருகப்பெருமானுக்குப் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பெற்று, வண்ண வண்ண மலர்களால் தோரணங்கள் கட்டப்பட்டு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தும் வகையில் காவடி எடுத்தும், பால்குடம் ஏந்தியும் வந்து எம்பெருமானை வழிபட்டு நெகிழ்ந்து நிற்கின்றனர்.
விழாவின் முக்கிய அம்சமாக, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானை சமேதராய் பலவித நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமான ராஜ தோற்றத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கின்றார். கோவிலெங்கும் பக்தர்கள் எழுப்பிய 'அரோகரா... அரோகரா...' என்ற பக்தி முழக்கம் விண்னைத் தொடும் அளவிற்குப் பரவச நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த புனித நாளாகக் கருதப்படுகிறது.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களைச் சிறப்பிக்கும் விதமாகவும், அசுர சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய கந்தனின் அருளைப் பெறவும் இந்நாளில் விரதமிருப்பது வழக்கமாகும். ஆடி கிருத்திகையன்று முருகனுக்குக் காவடி எடுத்தல், பாலாபிஷேகம் செய்தல் மற்றும் விரதமிருந்து வழிபடுதல் ஆகியவை தீராத வினைகளையும் பிணிகளையும் தீர்த்து, வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும், மன அமைதியையும் தரும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி