குதிரை பேரம் குறித்து கவர்னரிடம் புகார் அளிப்பது அரசியல் நாடகம்: மாணிக்கம் தாகூர்
மதுரை: அ.தி.மு.க.,வை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிய பெருமை, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனையே சேரும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை மற்றும் சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடக அரசியல்வாதிகள் மேகதாது விவகாரத்தை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால், தமிழக கட்சிகள், மாநில நலனை மையமாக வைத்து, அரசியல் ஆக்காமல், நம் நியாயத்தை எடுத்துக் கூற வேண்டும். பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் கை வைத்துள்ளனர். பா.ஜ.,வினர் உண்டியல் களவாணிகள்.
நாங்கள் இது குறித்து லோக்சபாவில் பேசுவோம். ராமருக்கே நீதி வாங்கித் தரும் நிலையில் இருக்கிறோம்.
நன்றாக இருந்த அ.தி.மு.க.,வை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிய பெருமை, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனை தான் சேரும். அவர் அ.தி.மு.க.,வை ஒன்றிணைத்திருந்தால், எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த அந்த கட்சி, இந்த நிலைக்கு வந்திருக்காது.
'வந்தே மாதரம்' பாடலையும், தேசிய கீதத்தையும் காங்கிரஸ் எப்போதும் மதிக்கிறது. ஆனால் அதை வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர், மலிவான அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது.
எம்.எல்.ஏ.,க்களுக்கு பணமோ, பதவியோ வழங்கி, அவர்களை தக்கவைப்பது தான் குதிரை பேரம். அவ்வாறு ஏதும் நடந்திருந்தால், தகுந்த ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
போலீசில் புகார் அளிக்காமல், கவர்னரிடம் புகார் அளிப்பது சரியானதல்ல; அது அரசியல் நாடகம். தமிழக கவர்னர் டில்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய பின், தமிழக அரசுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு கூறினார்.