குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் திரண்ட பெண்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விருதலைப்பட்டி கிராம பெண்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்து மனு அளித்தனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் துர்கா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஹென்றி பீட்டர், கொடைக்கானல் ஆர்.டி.ஓ., கீர்த்தனா, மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 580 மனுக்கள் பெறப்பட்டன.
அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து 6 மாற்றுத்திறனாளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய செயற்கை கால்கள், ஊன்றுகோல்கள், சக்கர நாற்காலிகள் என ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 757 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மாற்று இடம் வேண்டாம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், 'எங்கள் கிராமத்தை சேர்ந்தபலர் கூலித்தொழிலாளர்கள். 40 ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் இடத்தை நீர்நிலை புறம்போக்கு என அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.
எங்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறுகின்றனர். எங்களுக்கு மாற்று இடம் வேண்டாம். நாங்கள் வசிக்கும்இடத்தையே எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என' குறிப்பிட்டிருந்தனர்.
குளம் துார்வார நடவடிக்கை ஹிந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி தலைவர் மோகன் அளித்த மனுவில், 'மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அய்யன்குளத்தை துார்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
சூலாயுதத்துடன் வந்த முதியவர் சூலாயுதத்தில் தேசியக்கொடியைகட்டிஎடுத்து வந்த நிலக்கோட்டை தாலுகா நோட்டக்காரன்பட்டி காளிமுத்துவை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது சிலர் என்னை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். தந்தை இறப்புக்கு கூட ஊருக்குள் விடாமல் கொலைமிரட்டல் விடுத்தனர். இந்த பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே கலெக்டரை சந்திக்க வந்ததாக கூறினார். அவரை எச்சரித்த போலீசார் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
காலி குடங்களுடன் வந்த பெண்கள் வேடசந்துார் தாலுகா விருதலைப்பட்டி கிராம பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்டு வந்தனர். அவர்களிடம் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'எங்கள் கிராமத்தில் குடிநீர் முறையாக விநியோகம் செய்வதில்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளும் இல்லை. ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
அதனால் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் நேரடியாக புகார் தெரிவிக்க காலி குடங்களுடன் வந்தோம்' என்றனர். அவர்களை சமாதானப்படுத்தி பேசிய போலீசார் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.