குடிநீர் வழங்கக் கோரி மக்கள் மறியல்
எரியோடு: திண்டுக்கல் மாவட்டம் கோவிலுார், கோட்டூர் ஊராட்சிகளில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
கோவிலுார் ஊராட்சி செல்லக்குட்டியூரில் 6 நீர்த்தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. அருகில் சிக்கையகவுண்டன்குளத்தில் நிறுவிய 2 ஆழ்துளை கிணறுகள், காவிரி குடிநீர் திட்டம் மூலம் வினியோகம் நடந்தது.
இந்நிலையில் உள்ளூர் நீர் ஆதாரங்கள் வறண்டு போக, காவிரி நீரும் கிடைக்காமல் சில வாரங்களாக இப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். அதிகாரிகளிடம் புகார் செய்தும் தீர்வு கிடைக்கவில்லை.
அதிருப்தியில் இருந்த மக்கள் காலி குடங்களுடன் தோப்புப்பட்டி வந்து திண்டுக்கல் குஜிலியம்பாறை மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
வேடசந்துார் பி.டி.ஓ., கற்பகம், எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனக்கூறி போராட்டத்தை கைவிட செய்தனர்.
நிலக்கோட்டை: கோட்டூர் ஊராட்சி சங்கால்பட்டியில் சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.
நேற்று காலை நிலக்கோட்டை - செம்பட்டி ரோட்டில் சங்கால்பட்டி கிராம மக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை போலீசார், பி.டி.ஓ., காமராஜ் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி யளித்தனர்.
தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
குடிநீர் வழங்காததை கண்டித்து நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்திற்குள் ஆறாவது வார்டு பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.