📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 29, 2026 04:31 PM

குடும்பங்கள், வணிகங்களுக்கு $900 மில்லியன் கூடுதல் ஆதரவு, சிங்க‌ப்பூர் செய்திகள்

குடும்பங்கள், வணிகங்களுக்கு $900 மில்லியன் கூடுதல் ஆதரவு, சிங்க‌ப்பூர் செய்திகள்

மத்தியக் கிழக்குப் பூசல்களுக்கிடையே, பொருளியல் சுமையைச் சமாளிக்க, குடும்பங்களும் வர்த்தகங்களும் $900 மில்லியன் மதிப்பிலான ஆதரவுகளைப் பெறவிருக்கின்றன.

சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு வரும் 2027 ஜனவரி மாதம் கூடுதலாக $300 மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், குடும்பங்களுக்கு வழங்கப்படும் யு-சேவ் தள்ளுபடி, ‘காம்கேர்’ ஆதரவுத் திட்டங்களும் மேம்பாடு கண்டுள்ளன.

வரவுசெலவுத் திட்ட அறிவிப்பிற்குப் பின்னர் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழலைச் சமாளிக்க, கடந்த ஏப்ரல் மாதம் $1 பில்லியன் மதிப்பிலான கூடுதல் ஆதரவுகள் அறிமுகம் கண்டன.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட ஆதரவுகளை அறிவித்தார் நிதி இரண்டாம் அமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ்.

மத்திய கிழக்குச் சூழலால் ஏற்பட்ட எரிசக்தி விலையேற்றத்தைச் சமாளிக்க ஏதுவாக முதற்கட்ட ஆதரவுகளை உடனடியாகச் செயல்படுத்தியதைக் குறிப்பிட்டுப் பேசிய திரு சியாவ், “நிலைமை தற்போது சற்றே மேம்பட்டிருந்தாலும், தொடரும் நிச்சயமற்ற சூழலினால் உலகலாவிய எரிசக்தி விலையேற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், நமது பொருளியல் சிறப்பாக நிலைத்துள்ளது,” என்றார்.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட வலுவான முதலீடுகளின் பலனாக, ஆண்டின் முற்பாதியில் பொருளியல் வளர்ச்சி கண்டதாகவும் குறிப்பிட்டார்.

விநியோகத் தொடரின் தொடர்பில் ஏற்படும் சிக்கல், எரிசக்திச் செலவுகளால் பல்வேறு வணிகங்களும் கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதையும் சுட்டினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டு, குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கு இரண்டாவது கட்ட ஆதரவுகளை அரசாங்கம் வழங்கவுள்ளது,” என்று கூறியதுடன், குடும்பங்களுக்கான ஆதரவுகளையும் அவர் விளக்கினார்.

சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட ஆதரவு

வரும் அக்டோபர் முதல் ஜனவரி 2027 வரை, கூடுதல் யு-சேவ் தள்ளுபடிகள் வழங்கப்படும். வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஆதரவுடன் சேர்த்து, தகுதியுள்ள குடும்பங்களுக்கு காலாண்டுக்கு $110 முதல் $190 வரை வழங்கப்படும்.

இது, நான்கறை அல்லது அதைவிடச் சிறிய வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர்க் குடும்பங்களின் பொதுப் பயனீட்டுக் கட்டணங்களை முழுமையாக ஈடுசெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்காலிகப் பொருளியல் சுமைகளை எதிர்கொள்ளும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஆதரவுகளுக்கான வருமான வரம்பு கூடுதல் நீக்குபோக்குடன் கையாளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை செயல்படவுள்ள இந்த ஆதரவின்கீழ் குறைந்தது $250 முதல் இடைக்காலக் ‘காம்கேர்’ ஆதரவு கிடைக்கும். கூடுதல் தேவையுள்ள குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.

தொடர்ந்து வர்த்தகச் சங்கங்கள், வணிகங்கள், தொழிற்சங்கங்கள், ஊழியர்கள், அடித்தள அமைப்புகள், குடும்பங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், களநிலவரம் குறித்த கருத்துகளையும் பெற்று வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் சியாவ், சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்பச் செயல்படத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.