கூட்டத்தை பார்த்து பயம்.. அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டேன்.. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பகிர்ந்த சுவாரஸ்யம்
சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராஜூசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அப்படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். லைகா தயாரித்திருக்கிறது. நீண்ட காலம் நடந்த படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக நிறைவடைந்து ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது. இந்த மாதத்தில் ரிலீஸாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரது பேட்டி வைரலாகியிருக்கிறது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிறு வயதிலேயே கேமரா முன்பு தோன்றிவிட்டதால் கண்டிப்பாக அவரது தந்தை மாதிரி நடிகராக வருவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ வெளிநாட்டுக்கு சென்று இயக்கம் தொடர்பான படிப்பை படித்து இயக்குநராகிவிட்டார். அங்கே படித்துக்கொண்டிருக்கும்போதே குறும்படங்கள் எல்லாம் இயக்கியிருக்கிறார். கோலிவுட்டில் முதல் படமே பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா பேனரில் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
யார் வாங்கி கொடுத்த வாய்ப்பு?: இளம் வயதிலேயே அவர் இயக்குநராகும் வாய்ப்பை பெற்றது பலரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிலர் நெப்போட்டிஸம் குற்றச்சாட்டையும் அவர் மீது வைத்தார்கள். இன்னொரு தரப்போ இந்த வாய்ப்பை விஜய் வாங்கிக்கொடுக்கவில்லை; லண்டனில் இருக்கும் சங்கீதாவும் அவரது தரப்பும்தான் வாங்கி கொடுத்ததாகவும் கூறியது. அதுமட்டுமின்றி விஜய்க்கும், ஜேசனுக்கும் சண்டை என்றெல்லாம் சொன்னார்கள்.
இனிஷியலை தவிர்த்த ஜேசன்: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து மும்முரமாக நடந்தது. ட்ரெய்லர் வெளியாகியும் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸை பெற்றது. முதலில் வெளியான ட்ரெய்லர் முடிவில், ஜேசன் சஞ்சய் எஸ் என்று குறிப்பிட்டிருந்தார். தந்தைக்கும், தாய்க்கும் நடக்கும் விவாகரத்து பிரச்னையில் தாய் சங்கீதா பக்கம் நிற்பதால்தான் அவர் இந்த மாதிரி ஒரு செயலை செய்திருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. அடுத்தடுத்த அப்டேட்டுகளில் அதையும் நீக்கி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ட்ரெண்டாகும் பேட்டி: ஜூலை 31ஆம் தேதி படம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் 23ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸானதால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளி போயிருக்கிறது. அநேகமாக இந்த மாதத்துக்குள் ரிலீஸாகும் என தெரிகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாகியிருக்கும் அவர்; தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "வேட்டைக்காரன் படத்தில் நான் ஆடிய நடனத்தை இப்போது பார்த்தால், நாமா இதையெல்லாம் செய்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.
அப்பாவை கட்டிப்பிடித்தேன்: அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. அப்போது எனக்கு 9 வயதுதான் இருக்கும். அப்போதே அடிக்கடி ஷூட்டிங் சென்றிருக்கிறேன். அந்த ஆர்வத்தோடு வேட்டைக்காரன் படத்தின் பாடலில் வருவதற்கும் ஓகே சொல்லியிருப்பேன். அங்கே போன பிறகு ஷோபி மாஸ்டர் வந்தார். நான் ஆர்வமாக போய்விட்டாலும்; அங்கே இருந்த கூட்டத்தை பார்த்து பயந்துபோய் அப்பாவை தேடி போய் கட்டிப்பிடித்துக்கொண்டேன். பிறகு எப்படியோ நடித்துவிட்டேன்" என்றார்.