📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 12:32 AM

லஞ்ச புகாரை விசாரிக்க சென்ற இடத்தில் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்

லஞ்ச புகாரை விசாரிக்க சென்ற இடத்தில் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்

லஞ்ச புகாரில் வருவாய்த்துறை அதிகாரியை கைது செய்ய சென்ற பெண் போலீஸ் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டரே லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார் வந்தது. அதன்பேரில், குறிப்பிட்ட அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து லஞ்சஒழிப்பு துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவிட்டார். வேலியே பயிரை மேய்ந்தது போல நடந்துள்ள இந்த சம்பவம் லஞ்ச ஒழிப்பு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சமீபத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று வந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதற்காகஇன்ஸ்பெக்டர் விமலா நியமிக்கப்பட்டார்.விமலா லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையுடன் குறிப்பிட்ட வருவாய்த்துறை அதிகாரியை விசாரிக்க சென்றுள்ளார். விசாரணை நடந்தபோது, உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் தரவேண்டும் என்றும், லஞ்சம் தராவிட்டால் உங்களை கைது செய்வேன் என்றும் புகார் கூறப்பட்ட வருவாய்த்துறை அதிகாரியை இன்ஸ்பெக்டர் விமலா மிரட்டியதாக தெரிகிறது.

இந்த விவகாரம், ஒரு புகாராக லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்தது. லஞ்ச புகாரில் நடவடிக்கை எடுக்கசென்ற பெண் இன்ஸ்பெக்டர் புகார் கூறப்பட்டவரிடம் லஞ்சம் கேட்ட இந்த சம்பவம் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவிட்டார்.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி. துரைகுமார், இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இன்ஸ்பெக்டர் விமலா மீது கூறப்பட்ட புகார் உண்மை என்று தெரியவந்தது. எனவே விமலா மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி.அருண், இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

விமலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, லஞ்சஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாய் தயாள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.