📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 20, 2026 04:34 PM

லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்!

லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்!

லஞ்சம் இல்லாத அரசு நிர்வாகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு விஜய் கொடுத்த மற்ற வாக்குறுதிகளைவிட லஞ்சம்-ஊழல் இல்லாத நிர்வாகம் என்ற வாக்குறுதிதான் பெரிதும் கவர்ந்தது. சொன்னதை நிறைவேற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடனேயே லஞ்சத்துக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் சாட்டையை எடுத்து சுழற்ற தொடங்கிவிட்டார். சட்டசபையில் பேசும்போதும், "மக்கள் பணத்தில் ஒருபைசாகூட தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம். தொட்டாலும் விடமாட்டோம். இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்று கூறிவிட்டு "ஊழல் இல்லாத தமிழகமே இலக்கு, ஊழல் செய்யும் நிர்வாகத்திறனை இந்த அரசு ஒருநாளும் செய்யாது" என்று உறுதிபட ஆவேசமாக கூறியது மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்தது.

லஞ்சம் இல்லாத ஒரு புதிய விடியல் கண்ணுக்கு தெரியத்தொடங்கியது. சட்டசபையில் பேசியதோடு மட்டுமல்லாமல், அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கைவிடும் விதமாக, 'ஊழல் புகார் எதுவும் வந்து விடாமல் மக்கள் பணியாற்ற வேண்டும். ஊழல் முறைகேடு எதுகுறித்தும் புகார் வந்து அது உறுதிசெய்யப்பட்டால் அடுத்த நொடியே பதவியில் இருந்து அந்த அமைச்சரை நீக்க தயங்கமாட்டேன். இதில் தெரிந்தவர். தெரியாதவர் என்று பார்க்கவும் மாட்டேன்' என்று கூறியது அமைச்சர்களுக்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் கதி என்ன ஆகுமோ? என்று மக்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

பல அரசு கொள்முதல்களில் குறிப்பாக, மதுபான கொள்முதலில் புல்லுக்கு போய்க்கொண்டிருந்த தண்ணீரை மடைமாற்றி வயலுக்கு அதாவது, அரசாங்க கஜானாவுக்கு வந்து சேர வைத்தார். லஞ்சமாக சென்று கொண்டிருந்த பணத்தை அரசாங்கத்துக்கு வரியாக வரவைத்தார். இதுமட்டுமல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரையில் இல்லாத அளவில் மிகவும் துடிப்போடு பத்திரப்பதிவு அலுவலகங்கள். வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்கள், சோதனைச்சாவடிகள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் என்று மக்களோடு தொடர்புடைய அனைத்து அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்தனர். கணக்கில் வராத நிறைய பணத்தையும் கைப்பற்றினர்.

கையில் பணமாக வாங்காமல் 'ஜிபே' மூலமாக மிக துணிச்சலுடன் லஞ்சம் வாங்கப்பட்டு வந்தது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 35 தாலுகா அலுவலகங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதில், பணமாக வெறும் ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 251 மட்டுமே கைப்பற்றப்பட்டாலும், 'ஜிபே' வாயிலாக நூதனமான லஞ்சம் மூலம் ரூ.68 லட்சத்து 32 ஆயிரத்து 582 கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனி அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் '9498180936 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. அதை அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்களுக்கு தெரியும் வண்ணம் பெரிய எழுத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே முதல்-அமைச்சர் விஜய் கூறியதுபோல மக்களும் அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்கவேண்டாம். அதையும் மீறி கேட்டால் அரசு கொடுத்திருக்கும் எண்ணில் புகார் செய்யவேண்டும். அரசு ஊழியர்களும் இப்படி லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டு சிறைக்கு செல்வதைவிட லஞ்சம் வாங்காமல் பாரதியார் கூறியதுபோல, 'யாருக்கும் அஞ்சோம். எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்போதும் அஞ்சோம்' என்று லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தி பெருமையோடு வாழவேண்டும்.