மாமன்னனுக்கு ஒரு நீதி.. ஜனநாயகனுக்கு ஒரு நீதியா?
மாமன்னனுக்கு ஒரு நீதி.. ஜனநாயகனுக்கு ஒரு நீதியா? - திமுகவை பொளந்தெடுத்த தவெகவினர்!
உதயநிதியின் மாமன்னன் வெளியான சமயத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என அனைவரும் படத்தைப் பார்த்து ரசித்து சிலாகித்து பதிவுகளை வெளியிட்டனர்.
ஜனநாயகன் படத்தை தவெக அமைச்சர்கள் பார்த்ததை கடுமையான திமுக விமர்சித்துள்ள நிலையில், உங்க ஆட்சியில் நடந்ததை மறந்து விட வேண்டாம் என தவெக தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனநாயகன் ரிலீஸ் - தியேட்டரில் அமைச்சர்கள்
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. அனிருத் இசையமைப்பில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் பெரும் போராட்டங்களுக்கு இடையே நேற்று (ஜூலை 23) வெளியானது. விஜயின் சினிமா கேரியரில் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதேசமயம் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் என அனைவருமே தியேட்டரில் படம் பார்த்துள்ளனர்.
அதில் சில அமைச்சர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவமும் அரங்கேறியது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் திமுக கடுமையாக சாடியது. டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து இளைஞர் பட்டாளம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஒரு கூட்டம் பல மாவட்டங்களிலும் போராடி வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் பிரச்னையாக வெடித்தது. இத்தனை கலவரங்களுக்கு மத்தியில் தமிழக அமைச்சர்கள் படம் பார்த்தை வைத்து திமுக கடுமையாக விமர்சித்திருந்தது.
அவ்வளவு தான். தமிழக வெற்றிக் கழக தரப்பு கொதித்தெழுந்து விட்டது. பழைய விஷயங்களையெல்லாம் தோண்டி சமூக வலைத்தளங்களில் திமுகவை விமர்சிக்க தொடங்கினர். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் தான் முதல்முறையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் முதலில் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், பின்னர் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
சினிமாவில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பொறுப்பில் இருக்கும் வரை தொடர்ந்து படம் நடித்து வந்தார். ஆனால் அமைச்சராக மாறிய தருணத்தில் நடிப்பை கைவிடுவதாக அறிவித்தார். அவரின் கடைசிப்படமாக “மாமன்னன்” 2023ம் ஆண்டு வெளியானது. அதாவது 2022ம் ஆண்டு டிசம்பரில் அமைச்சரான நிலையில் இந்த படம் 6 மாத காலத்தில் வெளியானது.
இப்படியான மாமன்னன் வெளியான சமயத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என அனைவரும் படத்தைப் பார்த்து ரசித்து சிலாகித்து பதிவுகளை வெளியிட்டனர். அதுமட்டுமல்லாமல் அப்போது திமுக ஆதரவில் இருந்த கட்சிகளுக்கு சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டு உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு பற்றி புகழப்பட்டது.
Also Read: Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!
இப்படியெல்லாம் செய்து விட்டு இப்போது தவெக அரசின் அமைச்சர்கள் ஜனநாயகன் பார்த்தால் மட்டும் தவறு என சொல்வதா என கண்டித்துள்ளனர். மேலும் இந்த அரசின் முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் முதல் முறையாக பதவிக்கு வந்தவர்கள். இதற்கு முன்னாள் சினிமா நடிகர், ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள். அப்படியிருக்கும்போது தங்கள் தலைவனை கொண்டாடுவதில் என்ன தவறு? என கேள்வியெழுப்பியுள்ளனர். திமுகவினர் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தும் படம் பார்த்து விமர்சனம் செய்ததே இல்லையா எனவும் கொந்தளித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னால் முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் யாருமே சினிமா பார்த்தது இல்லையா.. அவர்கள் வார விடுமுறை தினத்திலா பார்த்தார்கள். சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு அருகிலேயே ரஜினி நடித்த கூலி படம் பார்த்தவர்கள் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் என சகட்டுமேனிக்கு கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி