மானவ் சுதாரை எச்சரித்த புஜாரா.. ஐபிஎல் தொடருக்காக “அந்த தவறை” செய்யக் கூடாது என அறிவுரை
மானவ் சுதாரை எச்சரித்த புஜாரா.. ஐபிஎல் தொடருக்காக “அந்த தவறை” செய்யக் கூடாது என அறிவுரை
காலே: இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இளம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதாருக்கு, முன்னாள் வீரர் சேதேஷ்வர் புஜாரா ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார். ஐபிஎல் தொடருக்காக தனது இயல்பான பந்துவீச்சு பாணியை மாற்றிவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து புஜாரா பேசுகையில், "மானவ் சுதார் தனது பந்துவீச்சு முறையில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தேவையில்லை. அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதிலோ அல்லது அங்கு வெற்றி பெறுவதிலோ எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஐபிஎல்-க்காக உங்களது சொந்த பலத்தை மாற்றிவிடாதீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை மெதுவாக வீசுவதும், காற்றில் மிதக்க விடுவதுமே உங்களது பலம். அதனை ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளுக்காக தட்டையான முறையில் வீச முயன்று மாற்றிவிடக் கூடாது" என்றார்.
இந்தப் போட்டியில் மானவ் சுதாரின் சாதுரியமான பந்துவீச்சை புஜாரா மிகவும் பாராட்டினார். ஐந்தாம் நாளில் இலங்கை அணி தனது கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 50 ரன்களுக்குள் இழந்து சுருண்டது. பழைய பந்தில் ஆடுகளம் ஒத்துழைக்காத போதும், மானவ் சுதார் தனது பந்துவீச்சு வேகத்தை 90 கிலோமீட்டர் வரை அதிகரித்தார், மேலும் பந்தை தூக்கி வீசி காற்றில் அதிக நேரம் இருக்குமாறு வீசினார். அவரது இந்த புத்திசாலித்தனமான பந்துவீச்சை புஜாரா பாராட்டி உள்ளார்.
தற்போது 24 வயதாகும் மானவ் சுதார், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நீண்ட கால அடிப்படையில் சிறப்பாக ஆடும் தகுதி படைத்தவர் என்பதால், ஐபிஎல் மோகத்தில் தனது இயல்பான பந்துவீச்சு திறமையை இழந்துவிடக் கூடாது என்று புஜாரா சுட்டிக் காட்டி இருக்கிறார்.
முன்பு இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி வந்த சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சமீப காலமாக தொடர்ந்து விக்கெட் வீழ்த்துவதில் சிரமப்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் அவர் தடுமாறுவது அவரது சர்வதேச போட்டி செயல்பாட்டை பாதிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், மானவ் சுதாரும் அதே நிலையை அடைந்து விடக் கூடாது என புஜாரா எச்சரித்து இருக்கிறார்.