மாணவிகளிடம் அத்துமீறல்; கல்லுாரி பேராசிரியர், உடற்கல்வி ஆசிரியர் கைது
- நமது சிறப்பு நிருபர் -
புதுக்கோட்டையில், பள்ளி மாணவிக்கு, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஈரோடில், கல்லூரி மாணவியை கட்டிப்பிடித்த, இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆமோஸ் தேவசகாயம், 52. இவர், அப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பிப்., 22ல் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில், பள்ளி மாணவியருடன் பங்கேற்றனர். அதன்பின், பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரது தோழியான சக மாணவியையும், ஆமோஸ் தேவசகாயம் காரில் அழைத்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியை காரில் முன் சீட்டில் அமர வைத்து, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரில், புதுக்கோட்டை மகளிர் போலீசார், ஆமோஸ் தேவசகாயம் மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
ஈரோடில், மாணவியை கட்டிப்பிடித்த, இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, திண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம், 47. ஈரோடில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியரான இவர், மற்றொரு கல்லுாரியில் நடந்த பருவத்தேர்வுக்கு, அறை கண்காணிப்பாளராக சென்றார். அப்போது தேர்வெழுதி விட்டு, விடைத்தாளை கொடுக்க வந்த, 20 வயது மாணவியை, பின்புறமாக கட்டிப்பிடித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி, ஈரோடு மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், போலீசார், ராஜாராமை கைது செய்தனர். ராஜாராம் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.