மசாலா காஃபி சிங்கப்பூரில்: இசை நிகழ்ச்சி அறிவிப்பு
‘மசாலா காப்பி’யைப் பருகியவர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால், ‘மசாலா காப்பி’ இசைக்குழுவின் பாடல்களைக் கேட்காத இசையன்பர்கள் குறைவு என்றே சொல்லலாம்.
“சிங்கப்பூர் ரசிகர்கள் எப்போதும் இசைக்கு அளிக்கும் வரவேற்பு அளப்பரியது. அவர்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கின்றன,” என்று தமிழ் முரசிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் ‘மசாலா காப்பி’ இசைக்குழுவின் நிறுவனர் வருண் சுனில்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் பாடல்களைப் பாடியிருந்தாலும் இம்முறை 90 விழுக்காடு தமிழ்ப் பாடல்களை மையமாகக் கொண்டே கச்சேரி அமையவுள்ளது என்றார் அவர்.
2014ல் தொடங்கப்பட்ட இந்த இசைக்குழு, ‘முன்பே வா’, ‘ஸ்நேகிதனே’ போன்ற பாடல்களுக்கு மறுவடிவம் கொடுத்ததன்மூலம் புகழ்பெற்று, பின்னர் தனிப்பட்ட பாடல்களையும் வெளியிட்டது.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ‘சிரிக்கலாம் பறக்கலாம்’, ‘ஏலோ புள்ளேலோ’, ‘உறியடி’ திரைப்படத்தில் ‘காந்தா’, ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ போன்ற பிரபலமான பாடல்களுக்கு ‘மசாலா காபி’ குழு இசையமைத்துள்ளது. அனிருத் ரவிச்சந்திரன், பென்னி தயாள் போன்ற முன்னணிப் பாடகர்களுடன் இணைந்தும் இக்குழு பணியாற்றியுள்ளது.
ஏற்கெனவே மூன்று முறை சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள இக்குழுவினர், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்புகின்றனர்.
“2018ல் எஸ்பிளனேடில் கிட்டத்தட்ட 3,000 ரசிகர்களுக்கு இடையே அரங்கில் விளக்குகளை எரியவிட்டபோது நான் கண்ட அந்த ரசிகர் கூட்டம் என்னை மெய்சிலிரிக்க வைத்தது,” என வருண் நினைவுகூர்ந்தார்.
இம்முறை தங்குதடையற்ற ‘பாப்’ இசை, ‘ராக்’ பாடல்களும் நாட்டுப்புறப் பாடல்களும் கலந்த கூட்டிசை, நடனத்துடன் சிறப்புப் பரிசுகளும் ரசிகர்களுக்குக் காத்திருக்கின்றன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
‘மசாலா காப்பி’ இசைக்குழுவின் ‘த ரிட்டர்ன் டூர்’ எனப்படும் நேரடி இசை நிகழ்ச்சி மேவரிக் ஈவென்ட்ஸ் & புரொடக்ஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு டிமார்க்கி, டௌன்டவுன் ஈஸ்ட் அரங்கில் நடைபெறவுள்ளது.
நுழைவுச்சீட்டுகளுக்கும் கூடுதல் தகவல்களுக்கும் ‘புக்மைஷோ’ (BookMyShow) இணையத்தளத்தை நாடலாம்.