📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 27, 2026 08:33 PM

மேகதாது அணை கட்ட கர்நாடகா ஒப்புதல் பெற வேண்டுமா: மத்திய அரசு பதில்

மேகதாது அணை கட்ட கர்நாடகா ஒப்புதல் பெற வேண்டுமா: மத்திய அரசு பதில்

புதுடில்லி: காவிரியின் குறுக்கே கட்டுமானங்களை பெற கர்நாடக மற்ற மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என 2018 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று, மத்திய அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகத்திடம் மேகதாது அணை குறித்து கீழ்கண்ட கேள்விகளை கேட்டு இருந்தார்.

* காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள வேண்டுமானால், கர்நாடகா, கீழ்ப்படுகை மாநிலங்களான தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 2018 பிப்., சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து மத்திய அரசுக்கு தெரியுமா?

* மேகதாது திட்டத்திற்கு கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற்று உள்ளதா?

*அவ்வாறாயின் அது குறித்த விவரங்கள் என்ன?

* மத்திய அரசிடம் உள்ள இத்திட்ட முன்மொழிவின் தற்போதைய நிலை என்ன? என கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி16ம் தேதி சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடவில்லை. அந்த உத்தரவில், காவிரி நதிநீர் தீர்ப்பாயம் 2007 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் 18 வது பிரிவு பொருத்தமானது என தெரிவித்து இருந்தது.

இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு முரணாக இல்லாத வகையில், ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கோ அல்லது தனக்குரிய நீரின் பலனை அனுபவிப்பதற்கோ உள்ள உரிமை, அதிகாரம் அல்லது அதிகார வரம்பை தீர்ப்பாயத்தின் உத்தரவு எந்த வகையிலும் பாதிக்காது.

மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, திட்ட ஆணையத்திடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர் கமிஷன் விதிமுறைகளின்படி, காவிரி நீர் தீர்ப்பாயத்தின் ஒப்புதலோடு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த பதிலில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.