மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் அவசியம்; முதல்வருக்கு திருமாவளவன் வேண்டுகோள்
வேலூர்: மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது தமிழக நலன்களுக்கு அவசியமான ஒன்று என்று தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது பேட்டி;
சட்டமன்றத்தில் முதல்வர் முன்மொழிந்துள்ள தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்பதை புதியதாக பொறுப்பேற்ற முதல்வர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
அதனை உறுதிப்படுத்துவதற்கான தீர்மானமாக தான் இதை பார்க்கிறோம். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும்? மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் எந்தளவு பாதிக்கப்படும்? விவசாயிகள் மட்டுமின்றி குடிநீருக்கு மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என கவலை மேலோங்கி இருக்கிறது.
எனவே இதை விவாதிக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒரு தேவை. அனைத்துக் கட்சிகளும் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தமிழக நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
எனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது அவசியமானது. தமிழக நலன்களுக்கு உகந்தது. தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.