📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 16, 2026 06:30 AM

மேடையில் மிளிர்ந்த புது நடிகர்கள்

மேடையில் மிளிர்ந்த புது நடிகர்கள்

வளர்ந்துவரும் நடிகர்கள், ஜூன் 6ஆம் தேதி, அகம் நாடகக்குழுவின் அரங்கில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தெஸ்பியன் சபா நாடகக்குழு ஏற்பாடு செய்த ‘டுவோ பல்ஸ்’ நிகழ்ச்சியில் மொத்தம் 14 பேர் ஏழு இணைகளாகப் பிரிந்து, ஏழு குறுநாடகங்களை மேடையேற்றினர்.

அகம் நாடகக்குழுவின் வழிகாட்டுதலுடனும் ஆதரவுடனும் இயங்கி வரும் தெஸ்பியன் சபா நாடகக்குழு, தங்கள் நாடகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முனையும் அனுபவமற்ற அல்லது அனுபவம் குறைந்த நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தளமாக இயங்கி வருகிறது.

அதன் முயற்சியில் மேடையேறிய ‘டுவோ பல்ஸ்’, அக்குழுவின் மூன்றாவது படைப்பாகும்.

படைப்புக்கான தயாரிப்புப் பணிகள் ஆறு வாரங்களுக்கு நடந்தன. இந்த நாடகங்களில் நடித்த நடிகர்களுக்குச் சிங்கப்பூரின் மூத்த நடிகர் எலனோர் டான் பயிற்சியளித்தார்.

நாடகங்களுக்கான கதைகளைச் சென்னையைச் சேர்ந்த ‘டம்மீஸ் டிராமா’ நாடகக்குழு எழுதியது. நடிகர்கள் அவற்றைச் சிங்கப்பூர் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டனர்.

‘மிஸ்டர் டாக்டர்’, ‘யாருக்குப் பின் யார்’, ‘சுவிட்ச்’, ‘அபொஃபிஸ்’, ‘வாதாடு லவ்’, ‘பயணம்’, ‘வீணையடி நீ எனக்கு’ என்று ஏழு நாடகங்களை நடிகர்கள் மேடையேற்றினர்.

ஷீனா கிரேஸ், அ.குகன், சாரா தர்மராசு, நிவேதா, பூவரஹன் திருமலை, விஷ்ணுபிரியா, காஞ்சனா பூவரஹன், கிருஷ்ணன், அன்பு நவீன், ஸ்ரீநிதி, காயத்திரி, சரண், வருண் செல்வராஜ், கிரிஷ்மிதா ஆகியோர் நாடகங்களில் நடித்தனர்.

நாடகங்களைப் பெரும்பாலும் தாங்களாகவே இயக்கிக்கொண்ட நிலையில், தெஸ்பியன் சபாவைச் சேர்ந்த செ.ரா.சக்தி மகேஷ்வரன் குழுக்களுக்கு நாடக இயக்கம் தொடர்பில் உதவி வழங்கினார்.

அனைத்து நாடகங்களும் ரசிக்கும்படி இருந்தாலும், ‘அபொஃபிஸ்’, ‘வாதாடு லவ்’, ‘வீணையடி நீ எனக்கு’ மூன்றும் ரசிகர்களின் மனங்களில் பதியும் விதத்தில் அமைந்திருந்தன.

காஞ்சனா பூவரஹன், கிருஷ்ணன் இருவரும் நடித்த ‘அபொஃபிஸ்’, அறிவியல் புனைவு நாடகமாக அமைந்தது.

கடவுள் நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் காலிழந்த அக்கா, அறிவியல் நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கும் தம்பி, இருவருக்கிடையே நடக்கும் வாக்குவாதம், தம்பியின் அறிவியல் கண்டுபிடிப்பால் ஏற்படும் நெருக்கடி, இறுதியில் நடப்பது என்னவென விறுவிறுப்பாகச் சென்றது அந்நாடகம்.

கூர்மையான வசனங்களுடன் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தது ‘வாதாடு லவ்’ நாடகம்.

அன்பு நவீன், ஸ்ரீநிதி இருவரும் மேடையேற்றிய அந்நாடகத்தில் மூத்த வழக்கறிஞர்மீது அவரிடம் பணிபுரியும் இளைய வழக்கறிஞர் காதல்வயப்பட்டுச் செய்யும் சேட்டைகள், குறும்புத்தனமான செயல்கள் என்று நகைச்சுவை நிறைந்திருந்தது.

ஒளி, ஒலி அமைப்பு நடிகர்களின் நடிப்பிற்கு வலுச்சேர்த்தன.

படைப்பின் இறுதி நாடகமான ‘வீணையடி நீ எனக்கு’, எவ்வகையிலும் சளைக்காத நாடகமாக அமைந்தது.

வருண், கிரிஷ்மிதா நடித்த அந்நாடகம் நடந்த நேரம் முழுவதும் அரங்கத்தில் சிரிப்பொலி எதிரொலித்தது.

அக்காவின் அதிரடி முடிவால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு மேலும் அதிர்ச்சியளிக்க விரும்பாத தங்கை தன் காதலைக் கைவிட முடிவெடுக்கையில், காதலர் இருவருக்குமிடையே நடக்கும் வாக்குவாதத்தை மையமாகக் கொண்டு அந்நாடகம் அமைந்தது.

நாடகத்தில் இடம்பெற்ற சிறிய விளையாட்டு அம்சம் சுவாரசியமாகவும் ரசிக்கும்படியும் அமைந்தது.

இப்படைப்புக்குத் தலைமை தாங்கிய காஞ்சனா பூவரஹன், ‘டுவோ பல்ஸ்’ ஒரு முழுமையான மேடைப் படைப்பாக மலர்ந்து நின்றது மட்டற்ற மகிழ்ச்சியளித்ததாகக் கூறினார்.

“தெஸ்பியன் சபா, நாடக ஆர்வலர்களுக்கு என்றும் ஒரு பாதுகாப்பான புகலிடமாகவும் அவர்களது திறமையை வளர்த்துக்கொள்ளும் படிக்கல்லாகவும் இருக்கும்,” என்று அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து இத்தகைய முயற்சிகள்வழி புதிய நடிகர்களையும் கலைஞர்களையும் சிங்கப்பூர்த் தமிழ் நாடகத்துறைக்கு அறிமுகப்படுத்த தெஸ்பியன் சபா முனைகிறது.