📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 05, 2026 06:03 AM

மேட்டூர் நீர் முக்கொம்பு வந்தடைந்தது: நாளை பாசனத்திற்காக கல்லணை திறப்பு!

மேட்டூர் நீர் முக்கொம்பு வந்தடைந்தது: நாளை பாசனத்திற்காக கல்லணை திறப்பு!

மேட்டூர் நீர் முக்கொம்பு வந்தடைந்தது: நாளை பாசனத்திற்காக கல்லணை திறப்பு!

மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. நேற்று காலை 6 மணி அளவில் வினாடிக்கு 2,737 கன அடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் படிப்படியாக அதிகரித்து 4,081 கன அடியாக உயர்ந்தது.

அதைத் தொடர்ந்து மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. ஏற்கனவே முக்கொம்பு மேலணைக்கு 777 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது நீர்வரத்து 1,500 கன அடியாக உயர்ந்துள்ளது. நேரம் செல்ல செல்ல நீர் வரத்தின் அளவு மேலும் உயர வாய்ப்புள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக வறண்டு கிடந்த காவிரியில் தண்ணீர் மிதமான வேகத்தில் ஆர்ப்பரித்து வருகிறது. கம்பரசம்பேட்டை அருகே உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில், அந்த புதுத் தண்ணீரில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உற்சாகத்துடன் ஆரவாரக் குளியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகரத்தைக் கடந்து, பெல் (BHEL) மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பகுதிகளைத் தாண்டி காவிரி நீர் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணையை வந்தடைந்துள்ளது. கல்லணைக்குத் தற்போது வினாடிக்குச் சுமார் 400 கன அடி வீதம் நீர் வந்துகொண்டிருக்கிறது.

நாளை கல்லணையில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக அதிகாரப்பூர்வமாகத் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

ஏற்கனவே முக்கொம்பு மேலணையில் இருந்து பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.