மின் தடை பிரச்னை தீர்க்க முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: மின் தடை காரணமாக பெறப்படும் புகார்களுக்கு, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்ய, அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுரை வழங்கினார்.
மின் தடை பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று மின் துறை ஆய்வு கூட்டம் நடந்தது.
இதுதொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் உள்ளதால், பற்றாக்குறை எதுவும் இல்லை. இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் சில இடங்களில் உள்ள பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்துள்ள மின் பயன்பாடு, மின் கேபிள்கள் சேதம் போன்ற காரணங்களால், மின் தடைகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற மின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, 2,275 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மின் வினியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும், 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள், 10,109 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக, 231 துணை மின் நிலையங்கள், 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மின் வினியோக சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக, 77 புதிய மின் தடை நீக்க மையங்கள், ஏழு கூடுதல் மின் பழுது நீக்கும் குழுக்கள், 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன.
இதன் வாயிலாக, பொது மக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, 'பேட்டரி எனர்ஜி' சேமிப்பு திட்டம், புதிய அனல் மின் நிலையம், நீர் மின் திட்டங்கள் வாயிலாக, எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய, அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
பொது மக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் கோளாறுகள் குறித்து, மின்னகம் சேவை மையங்கள் வாயிலாக தெரிவித்து, உடனடி தீர்வு பெறலாம். மின் தடை புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்ய, அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.
மின் பழுதுகளை சரி செய்வதற்கு, 15,058 மின் பணியாளர்களை முறைப் படி நியமிக்கவும், மின் தளவாட பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், மின் பணியாளர் களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு தனி அறை சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின் துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு, தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி இங்கு அமைச்சருக்கு அறை ஒதுக்கப்படுவது, இதுவே முதல் முறை.
'துண்டுச்சீட்டில் பணியிட மாறுதல் நடைமுறை முற்றிலும் நிறுத்தம்'மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படும் என, தி.மு.க., அரசு கொள்கை வகுத்தது. அது முற்றிலும் தவறான முடிவு. அனைத்து வகையான மின் நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. தற்போது, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு, புதிய முடிவை எடுக்க ஆலோசித்து வருகிறோம். சிறை, சட்டத்துறை மற்றும் மின் துறை சார்ந்த ஊழியர்களை, தகுந்த காரணமின்றி பணி இடமாற்றம் செய்ய கூடாது என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிறைத் துறை மற்றும் மின் துறையில், கடந்த ஆண்டுகளில், தேவையில்லாத நிறைய பணியிட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் வாயிலாக, ஊழல்கள் நடந்ததாக புகார்கள் வந்தன. அதனால், நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்படும் பணியிட மாறுதல்களை நிறுத்த உத்தரவிட்டு உள்ளோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்ய வேண்டிய முறையில், காலி பணியிட பட்டியல் வெளியிடப்படும். 'சீனியாரிட்டி' அடிப்படையில், மாறுதல்கள் வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இதன் வாயிலாக, மறைமுகமாக, துண்டுச்சீட்டில் பணியிட மாறுதல் வழங்கும் நடைமுறையை முற்றிலும் நிறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.