📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 23, 2026 02:02 PM

மின் தடைக்கு யார் காரணம்? உதயநிதி

மின் தடைக்கு யார் காரணம்? உதயநிதி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தடைக்கு யார் காரணம் என்பது தொடர்பாக, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியுடன், மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. முதல்வர் விஜயின் பெரம்பூர் தொகுதி, அதில் முதலிடத்தில் உள்ளது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பத்துாரில், தி.மு.க., பொதுக்கூட்டத்தில் மின் தடை ஏற்பட்டதால், அதை ஆர்ப்பாட்டமாக மாற்றினோம்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், தினசரி மின் தடை ஏற்படுவதால், பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மின்வெட்டை ஏற்படுத்தி, தொழில் முதலீடுகளை கோட்டை விட்டு விட வேண்டாம்.

முன்பெல்லாம் புயல் , மழை நேரத்தில் தான், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவர். ஆனால், த.வெ.க., ஆட்சியில் தான், மின் தடையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வி.சி.க., தலைமை அலுவலகத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்ற போது, ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன், பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திலேயே மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் முடங்கியுள்ளன.

மொத்தத்தில் தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. 'பியூஸ் கேரியர்' திருடு போவது தான் மின் தடைக்கு காரணம் என்று, அமைச்சர் கூறுகிறார். இது எடுபடாததால், மின் தடைக்கு தி.மு.க., ஆட்சியே காரணம் என்று பழி போட்டு வருகின்றனர்.

தி.மு.க., ஆட்சியில் ஏற்படாத மின் வெட்டு, த.வெ.க., ஆட்சியில் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை, முதல்வர் விஜய் தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர் நிர்மல் குமார்: ஒவ்வொரு நாளும் எந்த இடத்தில், எதனால் மின் தடை ஏற்படுகிறது என்பதை வெளியிட்டு வருகிறோம். மின் வாரியத்திற்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. கடந்த, 15 ஆண்டுகளாக மின் துறையில் எந்த கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை; 70,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மின் தடையை சரி செய்ய, 125 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்கள் பொறுமையாக இருங்கள். மின்துறை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

தி.மு.க., - செந்தில் பாலாஜி: கடந்த ஐந்தாண்டுகளில் சீரான மின் வினியோகத்திற்கு, 393 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன; 90,000 மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டன. துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தி, குறைகளை சரி செய்ய வேண்டும். ஆனால், த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், இதுவரை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை.

அமைச்சர் நிர்மல்குமார்: கடந்த தி.மு.க., ஆட்சியில், அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. 90,000 மின்மாற்றிகள் வாங்கியதாக செந்தில் பாலாஜி கூறினார். 44,000 மின்மாற்றிகள் வாங்கியது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: வெள்ளை அறிக்கை வெளியிடும் போது, அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகும்.

தி. மு.க., - சிவசங்கர்: மின்துறை என்பது சேவை துறை. அதில் லாபம், நஷ்டம் பார்க்க முடியாது. கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் இதே கடன், ஊழியர் பற்றாக்குறையோடு தான் சீரான மின் வினியோகத்தை உறுதி செய்தோம்.

பகல் நேரத்தில், பியூஸ் கேரியர் திருடு போனதாக, அமைச்சர் வீடியோ வெளியிடுகிறார். ஆனால், இரவில் தான் மின் தடை ஏற்படுகிறது. இது எப்படி என்பது புரியவில்லை.

உதயநிதி: இன்னும் இரண்டு நாள் பொறுங்கள் என்று அமைச்சர் கூறுகிறார். அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தில் மின்சாரம் இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.