மின்சிகரெட்டுகளைப் பதுக்கி வைத்திருந்தவருக்குச் சிறை, அபராதம்
கிட்டத்தட்ட 58,000 மின்சிகரெட் சாதனங்கள் லென்டோர், செம்பவாங் ஆகிய வட்டாரங்களில் பதுக்கி வைத்திருந்த கும்பலுடன் தொடர்புடைய 34 வயது ரோய் டான் ஜுன் ஜியேவுக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 19) 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களில் 17,000க்கும் மேற்பட்டவை மின்சிகரெட் இழுப்பான்கள் ஆகும். இக்கும்பல் வாடகைக்கு எடுத்திருந்த இரு கிடங்குகளில் ஒன்று லென்டோரில் உள்ள தரைவீடாகும். மற்றொன்று செம்பவாங் கில் உள்ள கேன்பரா பகுதியில் அமைந்துள்ள கூட்டுரிமை வீடாகும்.
சிறைத் தண்டனையோடு சேர்த்து, டானுக்கு $45,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையானது, அவர் அக்கும்பலில் பணியாற்றிய போது ஈட்டிய வருமானத்துக்கு சமமான தொகையாகும்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெயர் குறிப்பிடப்படாத நண்பர் ஒருவர் ரோய் டானை விநியோக வேலை ஒன்றில் அறிமுகப்படுத்தினார். பின்னர், அக்கும்பலின் உள்நாட்டு விநியோகிப்பாளர்களில் ஒருவரான 33 வயது ஏட்ரியன் சியா ஹோங் சிங்கிடம் டான் அறிமுகப்படுத்தப்பட்டதாக அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அன்றாட ஆர்டர்களை வட்டார விநியோகிப்பாளர்களிடம் ஒப்படைப்பதும் அவர்களிடம் இருந்து பண வசூல் செய்வதுமே இவர்களது பணியாகும். ஒவ்வொரு வட்டார விநியோகிப்பாளருக்கும் விநியோகம் செய்வதற்கும் பணத்தைப் பெறுவதற்கும் குறிப்பிட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டன.
வட்டார விநியோகிப்பாளர் நாளொன்றுக்கு 15 முதல் 30 ஆர்டர்கள் வரை விநியோகித்து, வெற்றிகரமான ஒவ்வொரு விநியோகத்திற்கும் $10 ஈட்டினார். ரோய் டான் பொருள்கள் விநியோகத்துக்குத் தமது சொந்தக் காரைப் பயன்படுத்தினார். இவரது குற்றச்செயல் எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தது என்பது பற்றிய விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று அதிகாரிகள் நடத்திய சோதனையில், லென்டோர் வட்டாரத்தில் உள்ள வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 20,000 மின்சிகரெட் தொடர்பான பொருள்களும் கேன்பரா வீட்டில் இருந்து 38,000க்கும் மேற்பட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அன்றைய தினமே ரோய் டான் கைது செய்யப்பட்டார்.