மின்துறையில் தன்னிறைவு பெறவேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: ‘மின் பரிமாற்றம் மற்றும் விநியோக கட்டமைப்பை ஒருங்கிணைத்து தமிழகத்தை மின்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும்’ என அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல் வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்துக்கு முதல்வர் விஜய் நேற்று திடீரென வருகை தந்தார். அப்போது மின் விநியோகம் மற்றும் மின் கட்டுப்பாடு தொடர்பான முக்கிய மையங்களை ஆய்வு செய்தார்.
மாநிலத்துக்கு தேவையான மின்சார வளர்ச்சி மற்றும் உற்பத்தி நிலவரம் குறித்தும், மின்சாரத்தைப் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள், நிலக்கரி கிடைப்பதில் ஏற்படும் சவால்கள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
மின் பற்றாக்குறையை போக்க...
அடுத்த ஆண்டு கோடை காலத்தின் மின்பற்றாக் குறையை தீர்க்க எடுக்கவுள்ள நடவடிக்கை மற்றும் அதற்கான விரிவான செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல், மழை, புயல், உள்ளிட்ட இயற்கைக் காரணிகளால் ஏற்படும் மின் தடைகள், களப்பணியாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ள மின் துறையின் நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கினர்.
மேலும், மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தை பார்வையிட்ட முதல்வர் விஜய், அங்கு பெறப்படும் அழைப்புகள், அவற்றின் பதிவு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்புதல், புகார்களின் நிலையைக் கண்காணித்தல் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதுதவிர, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசின் மானியத்துடன், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 3 கிலோவாட் வரை ரூ.1 லட்சம் வரையிலான கூடுதல்மானியத் திட்டத்தைப் பயன்படுத்தி, பொதுமக்கள் அதிக எண்ணிக்கையிலான வீடுகளில் மேற்கூரை சூரிய மின் அமைப்புகளை நிறுவி நுகர்வோர் பயன்பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், மின் சேமிப்பு மற்றும் மின் தேவையைச் சீராக நிர்வகிக்க மின்கல ஆற்றல் சேமிப்பு கொள்கையை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும், வலுவான மின் பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தமிழகத்தை மின்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச்செயலர் சாய்குமார், மின்துறை செயலர் அணில் மேஷ்ராம், மின்சார வாரியத் தலைவர் அருண் ராய் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.