மிஸ்டர் கழுகு: ``சபதம் எடுத்த வேலுமணி... சோகத்தில் ஆதரவாளர்கள்!''
மிஸ்டர் கழுகு: ``சபதம் எடுத்த வேலுமணி... சோகத்தில் ஆதரவாளர்கள்!''
த.வெ.க அமைச்சரவையில், கடைசி நேரத்தில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் சீட்டுகள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன
தேர்தல் முடிவுகள் வெளியாகி சென்னைக்குப் புறப்பட்டபோதே, `துணை முதல்வராகிவிட்டுத்தான் மீண்டும் கோவைக்கு வருவேன்' என்று சபதம் எடுத்து விட்டுப் புறப்பட்டாராம் எஸ்.பி.வேலுமணி. ஆனால், த.வெ.க-வை ஆதரிக்கும் அவரின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்காத நிலையில், அடுத்தடுத்து நடந்த அரசியல் நிகழ்வுகளால், அவரது எம்.எல்.ஏ பதவியே ஊசலாட்டத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், `எப்படியும் த.வெ.க அமைச்சரவையில் அண்ணனுக்கு இடம் கிடைத்துவிடும். அமைச்சராகிவிடுவார்...' என்ற கனவோடு, கடந்த மே 20-ம் தேதி மாலை கோவையிலிருந்து புறப்பட ஆயத்தமாகியிருந்தனர் வேலுமணியின் ஆதரவாளர்கள். ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என உறுதியானதால் உற்சாகமிழந்து போயிருக்கிறார்கள். கூடவே, `துணை முதல்வர் சபதம் எடுத்துவிட்டுப்போன அண்ணன் எம்.எல்.ஏ-வாகவாவது கோவைக்கு வருவாரா...' என்று கடும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
``மிஸ்ஸான மாண்புமிகு பதவி... ஆறுதல் சொன்ன செங்கோட்டையன்!"
த.வெ.க அமைச்சரவையில், பல மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க் களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பது பெரிய குறையாகப் பேசப்பட்டாலும், மேற்கு மண்டலத்தில் பலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், திருப்பூர் சத்யபாமா, பாலமுருகன் என அமைச்சர் பட்டியலில் இருந்த
எம்.எல்.ஏ-க்கள் சிலரின் பெயர்கள் கடைசி நேரத்தில் மிஸ்ஸாகியிருக்கின்றனவாம். வருத்தத்தில் இருந்த அவர்களிடம், `எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்' என ஆறுதல் சொல்லியிருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன். ஒரு சிலரிடம், `என் கையில் எதுவுமில்லை. வாரியத் தலைவர் பதவியில் பார்த்துக்கலாம்' எனக் கையை விரித்திருக்கிறாராம். `நம்பி வந்தவர்களைக் கைவிடாமல் இருந்தால் சரி' என்று புலம்பலோடு கிளம்பிச் செல்கிறார்கள் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள்.
``மாண்புமிகு பதவிதான் இல்லை... தலைவராகவாவது ஆக்குங்க...’’
புது கார் வாங்கிய `இலை' கட்சி நிர்வாகி!
மான்செஸ்டர் நகரில், `ஜெயில்' மாஜியை எதிர்த்து `இலை' கட்சியின் பெண் தெய்வம் பெயர்கொண்ட நிர்வாகி களம் கண்டார். தேர்தலில் படுதோல்வி அடைந்ததோடு, மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டார். இலைக் கட்சியின் தோல்வியாலும், கட்சிக்குள் வெடித்த பூகம்பத்தாலும் அந்தக் கட்சி நிர்வாகிகளெல்லாம் கடும் அப்செட்டில் இருக்க, மூன்றாமிடம் பிடித்த நிர்வாகி புதிதாக வாங்கிய காரில் ஜாலியாக உலாவருகிறாராம். `தேர்தலுக்கு, கட்சி கொடுத்த இனிப்புகளை முறையாகக் கொடுக்கவில்லை. மேலும், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தேர்தலை நிறுத்தக் கோரி சண்டை போட்ட அந்த நிர்வாகிக்கு, சூரியக் கட்சியின் மாஜி அமைச்சரிடமிருந்து, அமைதியாக இருக்கச் சொல்லி சில ஸ்வீட் பாக்ஸுகள் வந்தன. அந்த இனிப்புகளை வைத்துத்தான் புது கார் வாங்கியிருக்கிறார்' என்று கொந்தளிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
``விரைவிலேயே டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வரும்...’’ அச்சத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்!
பொதுப்பணித்துறையில், சில தினங்களுக்கு முன்பு ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரமாண்ட வரவேற்பை அங்கிருக்கும் இன்ஜினீயர்கள் தரப்பில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை அகற்றச் சொன்ன அமைச்சர், `இதுவரை எப்படி இருந்தீர்கள் என்று தெரியாது. இந்த ஆட்சியில் க்ளீனாக இருக்க வேண்டும்' என வார்னிங் கொடுத்தாராம். கூட்டம் முடிந்ததும், `இந்தத் துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகளுக்கு அந்த இரண்டு இன்ஜினீயர்கள்தான் காரணம்' என அமைச்சர் தரப்பிடம் சங்கத்தைச் சேர்ந்த சிலர் புகார் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, `யார் தவறு செய்தார்களோ, அவர்களுக்கான இட மாறுதல் ஆர்டர் விரைவில் வரும்' என அமைச்சர் தரப்பு தகவல் சொல்லியிருக்கிறது. பொதுப்பணித்துறையில் பவர்ஃபுல் பதவிகளில் இருக்கும் ஊழல் அதிகாரிகள் பலரும் விரைவிலேயே தூக்கியடிக்கப் படுவார்கள் என்பதால் அதிகாரிகள் பலரும் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்களாம்.