மகனுக்கு ரொம்ப நல்ல சம்பளம்.. மனைவிக்கு கவலையில்லை.. ரஜினிதான் உதவினார்.. மோகன் சர்மா ஓபன்
சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் மோகன் சர்மா. மேலும், நம்ம கிராமம் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கி பெயர் பெற்றவர். இப்போது கடுமையான நிதி நெருக்கடி காரணமாக கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிடம் மனம் திறந்து பேசினார் அவர்.
மோகன் சர்மா தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். மேலும் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அவர் இயக்கிய நம்ம கிராமம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. அவரது கிராஃப் உச்சத்தில் இருந்த சமயத்தில் போயஸ் கார்டனில் வசித்தார். பிறகு ஒரு படம் சொந்த தயாரிப்பில் எடுத்த அவர்; அதில் சிக்கினார். அதிலிருந்து மீள முடியாத அவர் இப்போது முதியோர் இல்லம் ஒன்றில் வசித்துவருகிறார். ரஜினிகாந்த் உள்ளிட்டோர் உதவி செய்திருக்கிறார்கள்.
மனம் திறந்த மோகன் சர்மா: இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிடம் தனது குடும்பம், இந்த நிலைமைக்கான காரணம் குறித்தெல்லாம் மனம் திறந்து பேசினார். அவர் பேசியபோது, "என்ன பிரச்னை என்றால்? பிரச்னை அவ்வளவுதான். கதையாக சொல்வேன். நான் இந்த இடத்துக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றேன். இரண்டு படங்கள் இயக்கியிருக்கிறேன். நல்ல படங்கள் செய்ய வேண்டும் என நிறைய பேர் சொல்வார்கள். இரண்டு நல்ல படங்களை நான் எடுத்தேன். இரண்டு படங்களும் தவிக்கவிட்டுவிட்டன. அனைத்தும் நானே பண்ண வேண்டியதாகிவிட்டது. அதேபோல் காலில் எனக்கு பெரிய அறுவை சிகிச்சை நடந்துவிட்டது.
மாதம் முப்பதாயிரம் ரூபாய்: நடக்க முடியாமல் இருந்தேன். அதை சரி செய்ய செலவு ஆகிவிட்டது. கடைசியாக கையில் ஒரு ரூபாகூட இல்லை. உடல்நலத்தில் பல பிரச்னைகளிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் மாதம் 35,000 ரூபாய் ஆகிறது. அந்த நேரத்தில் இந்த ட்ரஸ்ட் ரோட்டரியை சேர்ந்த நிறைய பேர் இருக்கிறார்கள். நான் அந்த க்ளப்புக்கு ப்ரெசிடென்ட்டாக இருந்தேன். நீங்கள் இலவசமாக இங்கே இருக்கலாம் என சொன்னார்கள். அதனால் இங்கே இருக்கிறேன்.
வேறு வழியில்லை: வெளியே எங்கேயும் போறது இல்லை. சினிமாவால்தான் அனைத்தையும் இழந்தேன். ரிலீஸ் செய்ய முடியாமல் போய்விட்டது. அதில் வீக்காகிவிட்டேன். நிறைய பணம் போய்விட்டது. நான் எடுத்த ஒரு படம் விருதெல்லாம் வாங்கிய படம். ஆனால் தவித்துவிட்டேன். வேறு வழியில்லாமல் இங்கே வந்துவிட்டேன். நான் இருப்பதற்கு பெரிய அறை கொடுத்திருக்கிறார்கள். மருத்துவர்கள் இருக்கிறார்கள். வேளா வேளைக்கு உணவு கொடுத்துவிடுகிறார்கள்.
யாருக்குமே வரக்கூடாது: இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நல்ல நிலைமையிலிருந்து இப்படி வந்ததற்கு எனக்கு வருத்தம்தான். பரவாயில்லை. வாழ்க்கையில் நிறைய ஏற்றங்கள், இறக்கங்கள் வரும். ஒரே நிலைமையில் வாழ்க்கை இருக்காது. அதையெல்லாம் அனுபவித்துவிட்டேன். எனக்கு ஒரே ஒரு மகன்தான். ஜெர்மனியில் இருக்கிறான். உங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னான். இங்கே இருக்கும்போதே மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம். ஆனால் நான் அவனிடம், வேண்டாம் நான் உனக்கு என் கடமையை செய்துவிட்டேன். என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லிவிட்டேன்.
விவாகரத்து எனக்கு: பெர்லினில் அவனுக்கு போஸ்டிங். அவன் மனைவிக்கு பத்து லட்சம் ரூபாய். வீடு, கார் என அனைத்து வசதிகளுடன் இருக்கிறான். ஒருகட்டத்தில் தனிமையில் இருக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது. இங்கே வந்துவிட்டேன். எனக்கு விவாகரத்து. அது தனி கதை. அதை பற்றி எதுவும் பேசுவதற்கு இல்லை. இப்போது நடப்பது எல்லாம் அவங்களுக்கும் தெரியும். அதை பற்றியெல்லாம் அவங்க கவலைப்படவில்லை.
ரஜினிகாந்த்தை கடவுள்தான் அனுப்பி வைத்திருக்கிறார். எனக்கு உதவி செய்பவர். அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். பாராட்டுகிறேன். அவர் எனக்கு கடவுள் மாதிரி உதவி செய்தார். என் அக்கவுண்ட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் போட்டுவிட்டார். அதுதான் என்னுடைய தன்மானத்தை காப்பாற்றியது. அவர் இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்" என குறிப்பிட்டார்.