📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 07, 2026 11:33 PM

’மகுடம்’ டிரைலரை வெளியிட்ட விஷால்.. மாஸா?. அரைச்ச மாவா?.. எப்படி இருக்கு?

’மகுடம்’ டிரைலரை வெளியிட்ட விஷால்.. மாஸா?. அரைச்ச மாவா?.. எப்படி இருக்கு?

சென்னை: சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் படத்தின் டிரைலர தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஷால் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்துள்ளார். அப்பா லிங்காவின் இளமைக் காலம் மற்றும் முதுமைக் காலம் என மொத்தம் 3 வித தோற்றத்தில் கடுமையாக விஷால் தனது முயற்சிகளை கொட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது.

அப்பா லிங்கா விஷாலுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். மெடிக்கல் ரெப்பாக வரும் மகன் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்தார். ஆக்‌ஷன், காமெடி என அனைத்து கமர்ஷியல் பேக்கேஜும் இடம்பெற்ற ஜனரஞ்சகமான படமாகவே கொடுக்க விஷால் முயற்சித்துள்ளார்.

ஒரு எறிந்த உடலில் இருந்து சிகரெட் பற்ற வைக்கும் காட்சிகள் டீசரில் இருந்த நிலையில், இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்த நிலையில், அடுத்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் மோத தயாராகி விட்டார் விஷால்.

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா: சென்னையில் இன்று மகுடம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக விஷால் நடத்தியுள்ளார். சற்று முன் சமூக வலைதள பக்கத்தில் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலரை விஷால் வெளியிட்டு மகுடம் படத்தின் டிரைலரை மக்கள் பார்வைக்கு கொடுத்துள்ளார். ஆகஸ்ட் 7ம் தேதி மாலை முன்னதாக சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டிரைலரும் வெளியான நிலையில், அதற்கு போட்டியாக இன்றே மகுடம் டிரைலரும் வெளியாகி உள்ளது.

மகுடம் டிரைலர் எப்படி இருக்கு?: விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் படத்தின் டிரைலர் பக்கா ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாகவே உருவாகியுள்ளது. விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படம் போலவே மகுடம் படத்தின் டிரைலரும் உள்ளது. அந்த படத்தில் டைம் மெஷின் போல ஒரு விஷயம் இருந்தது. இந்த படத்தில் கன்டெயினரில் ஏதோ ஒரு விஷயத்தை மறைத்து வைத்து விஷால் பாதுகாக்கிறார். அதுதான் மகுடமா? என்பது படம் வெளியானால் தான் தெரிய வரும். மார்க் ஆண்டனி போலவே மொத்த படமும் இருந்தால் விஷாலுக்கு மீண்டும் ஒரு வெற்றி மகுடம் பார்சல் கிடைக்கும்.