📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 18, 2026 09:31 AM

மம்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி... TMC

மம்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி... TMC

மமதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி... TMC-க்கு தேர்தல் ஆணையம் போட்ட செக்!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இதனையடுத்து பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், தாங்களே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டனர். இந்த அணியையே உண்மையான மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சியாகவும் சபாநாயகர் அங்கீகரித்தார்.

இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், திரிபுராவில் மிக சிறிய கட்சி ஒன்றில் இணைந்ததாக அறிவித்துவிட்டனர். இதனிடையே அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் பூசலை முறைப்படி அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம், வியாழக்கிழமை இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதில், கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை முடக்கியுள்ள தேர்தல் ஆணையம், பிரச்சினை முடிவுக்கு வரும் வரை மம்தா பானர்ஜி மற்றும் அரூப் ராய் தலைமையிலான இரு போட்டி பிரிவினரும் புதிய பெயர்கள் மற்றும் சின்னங்களைத் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கு அக்டோபர் 9-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

“கிடைக்கப்பெற்ற தகவல்களை பரிசீலித்த பிறகு, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸில் இரு போட்டி அமைப்புகள் உள்ளன என்றும், ஒன்றிற்கு மமதா பானர்ஜியும், மற்றொன்றிற்கு அரூப் ராயும் தலைமை வகிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. இரு குழுக்களும் தங்களையே உண்மையான கட்சி எனக் கோருவதால், 1968-ம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) உத்தரவின் கீழ் விரிவான விசாரணை நடத்தப்படும்” என்று தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குள் ஏற்படும் பிளவுகளை, தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள் உத்தரவின் 15-வது பிரிவின் கீழ் விசாரித்து முடிவு செய்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், இடைத்தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணையை முடிக்க போதிய கால அவகாசம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு அணிகளையும் சமநிலையில் வைக்கும் வகையில், அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற பெயரையோ, கட்சியின் “பூக்கள் மற்றும் புல்” (Flowers and Grass) சின்னத்தையோ எந்த அணியும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரு அணிகளும் தங்களுக்கான புதிய பெயர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், விருப்பப்பட்டால் தாய் கட்சியான “அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்” என்ற பெயருடன் தொடர்புடைய பெயர்களையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இலவசச் சின்னங்களின் பட்டியலில் இருந்து இரு அணிகளுக்கும் தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான உரிமைப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையம் இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அணியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணியின் சார்பில் ரிதப்ரதா பானர்ஜி நேரில் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

மேலும் இன்று காலை 11 மணிக்குகுள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளையும் தங்களின் விருப்பமான மூன்று பெயர்கள் மற்றும் சின்னங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.