Modha Rathri Madhavan's Review
சென்னை: ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா, பக்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் மொத ராத்திரி. சில மாதங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான மாதவன் இந்தப் படம் குறித்து பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை இயக்குநர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. அப்படி வந்திருப்பவர்தான் இயக்குநர் ராஜா கருப்பசாமி. தென் தமிழ்நாட்டை சேர்ந்த அவர்; சென்னையில் பல வேலைகளை பார்த்துவிட்டு; உதவி இயக்குநராகவும் இருந்தார். ஒருவழியாக படம் இயக்கும் வாய்ப்பை பெற்ற அவர், முதல் படமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மொத ராத்திரி படத்தை இயக்கினார்.
படத்துக்கு நல்ல வரவேற்பு: இதில் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். சிறை பட புகழ் அனிஷ்மா ஹீரோயினாக நடித்திருக்கிறார். பக்ஸ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டர்களில் வெளியான படத்துக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு படத்தை பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டதாகவும்; கதையும், திரைக்கதையும் அபாரம் என்றும் கொண்டாடி தீர்த்தார்கள்.
என்ன ஸ்பெஷல்?: படத்தில் சந்தேகமே இல்லாமல் ராஜா கருப்பசாமி செய்த விஷயங்கள்தான் ஸ்பெஷல். எளிமையன கதையை ஜாலியான மற்றும் ஒழுங்கான திரைக்கதை பெரிய வெற்றி பெற வைக்கும் என்பதை நிரூபித்திருக்கிறார். மேலும், சமூகத்துக்கு தேவையான பல கருத்துக்களையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றதும் ரசிக்கும்படியாக இருந்தது. கண்டிப்பாக வருக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது. கார்த்தி உள்ளிட்டோர் எல்லாம் நேரில் ராஜாவை அழைத்து பாராடியது குறிப்பிடத்தக்கது.
மாதவன் சொன்னது: இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான மாதவன் மொத ராத்திரி படம் குறித்து பேசியிருக்கிறார். அவர் படம் குறித்து பேசுகையில், "ஒரு தமிழ் படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்து ரசித்தேன். மொத ராத்திரி படத்தின் திரைக்கதை, கண்களை கவரும் விஷூவல் கதை சொல்லல் மற்றும் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. நீண்ட காலத்துக்கு பிறகு வாய் விட்டு சிரித்ததுடன் ரசித்து கைகள் தட்டவும் செய்தேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு எழுந்து நின்று கை தட்டும் மரியாதையை சமர்ப்பிக்கிறேன் இந்தப் படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று" என குறிப்பிட்டிருக்கிறார். மாதவன் பாராட்டியிருப்பது படக்குழுவினருக்கு மேற்கொண்டு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.