📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 01, 2026 06:32 AM

மோடி, அமித் ஷாவுக்கு காங்கிரஸ் ராகுல் மிரட்டல்

மோடி, அமித் ஷாவுக்கு காங்கிரஸ் ராகுல் மிரட்டல்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இளைய தலைமுறையினரை மிரட்டி அடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ''நீங்கள் இந்தியாவின் கடந்த காலம்; நாட்டின் எதிர்கால தலைமுறையினரிடம் கவனமாக இருங்கள்,'' என, எச்சரித்து உள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்து நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் வேறு சில தேர்வுகளின் வினாத்தாள் கசிந்த சம்பவங்களும் நடந்தன.

இதற்கு எதிராக டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஏராளமான இளைய தலைமுறையினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் ஜூலை 20ல் வன்முறையாக மாறியது.

இதையடுத்து பொதுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க, 2024ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை கடுமையாக்கும் புதிய திருத்த மசோதா பார்லிமென்ட்டில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. அவர்களின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இளைய தலைமுறையினரை மிரட்டி மவுனமாக்க முடியாது. முதலில் தடியடி நடத்தி அவர்களின் எலும்புகளை உடைத்தீர்கள். இப்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சமூக வலைதள கணக்குகளையும் முடக்குகிறீர்கள்.

நீங்கள் இந்தியாவின் கடந்த காலம் ஆகிவிட்டீர்கள். நாட்டின் எதிர்காலத்தை எப்படி நடத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.