📅 Thursday, 19 November 2026 IST | கார்த்திகை 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 25, 2026 03:33 PM

மோடி அரசை கலங்கடித்த கரப்பான் பூச்சிகள்... மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக மறுப்பதன் பின்னணி என்ன?

மோடி அரசை கலங்கடித்த கரப்பான் பூச்சிகள்... மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக மறுப்பதன் பின்னணி என்ன?

மோடி அரசை கலங்கடித்த கரப்பான் பூச்சிகள்... மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக மறுப்பதன் பின்னணி என்ன?

``இது எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்ட போராட்டம். வெளிநாட்டு நிதியில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவை’’ என்கிறார்கள்.

“நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் குரல்வளையை நசுக்கிவிட்டு, நாடாளுமன்றக் கதவுகளை அடைப்பதுதான் ஜனநாயகமா?” என மத்திய ஆட்சியாளர்களை நோக்கிக் கோபம் கொப்பளிக்கக் கேள்வியெழுப்புகிறார்கள் இந்திய இளைஞர்கள்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவால், மறுதேர்வு எழுதச் சொல்லி மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது மத்திய அரசு. நீட் மறுதேர்வு அறிவிக்கப்பட்ட ஒரு மாதகால இடைவெளியில் சுமார் 20 மாணவர்களின் உயிர் பரிதாபமாகப் பறிபோனது. இந்த அவலத்துக்கு எதிராக, சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்ட இயக்கமான `காக்ரோச் ஜனதா கட்சி’ (சி.ஜே.பி) இளைஞர்களை ஒன்று திரட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டத்தைத் தொடங்கியது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

`நீட் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்’ என்பதுதான் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள். சுமார் 25 நாள்களாக ஜந்தர் மந்தரில் அறவழியில் போராடிய மாணவர்களின் குரல், போராட்டக் களத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்திலுள்ள அலுவலகத்தில் இருக்கும் பிரதமருக்குக் கேட்கவில்லை.

எனவே, ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி, `எங்களது எதிர்காலம் என்னவாகும்?’ என்ற கேள்வியோடு பேரணியாக மாணவர்கள் முன்னேற, காவல்துறையை ஏவி அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறது மத்திய அரசு. எவ்வித முன்னறிவிப்புமின்றி மாணவர்கள் மீது தடியடி நடத்தியது டெல்லி போலீஸ். கண்ணீர் புகைக்குண்டுகள், கற்களைக்கொண்டு மாணவர்கள்மீது திட்டமிட்டு காவல்துறை நடத்திய தாக்குதலின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.

அலறியடித்து ஓடிய மாணவர்களைக் காவல்துறையினர் துரத்தித் துரத்தி அடித்த காட்சிகளும், 18 வயது நிரம்பாத மாணவர்களையும், பெண்களையும் கொடூரமாகக் காவல்துறையினர் தாக்கிய காட்சிகளும் நெஞ்சை உலுக்கியெடுத்தன. ரத்தம் கசிய ஏராளமான மாணவர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையைக் கொண்டு அரசு அச்சுறுத்தியும் மாணவர்கள் அசராமல் நாடாளுமன்றத்தை நோக்கி நகரத் தொடங்கியதும், நாடாளுமன்ற வாயில்கள் மூடப்பட்டன.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க முயன்ற மோடி அரசுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் பிரதமர் இல்லத்துக்கு அருகே போராட்டத்தை முன்னெடுத்தனர். டெல்லி காவல்துறையினர் ராகுலை பலவந்தமாக இழுத்துச் சென்றபோது, அவருக்கு மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படவே பரபரப்பானது போராட்டக்களம். டெல்லியில் மட்டுமின்றி சி.ஜே.பி கட்சியின் போராட்டம் தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்களுக்கும் பரவியிருக்கிறது.

சி.ஜே.பி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, ``20 மாணவர்களின் உயிர் பறிபோன பிறகும், தர்மேந்திர பிரதானைப் பாதுகாப்பதற்கான காரணம் என்னவென்பதைப் பிரதமர் மோடி நாட்டுக்குச் சொல்ல வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது, ``தர்மேந்திர பிரதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நீண்டகாலம் பயணித்தவர். பஜ்ரங் தளம் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். பா.ஜ.க-வின் மிக முக்கியத் தலைவர். கட்சிக்காக நிதி திரட்டித் தருவதில் வல்லவர். 2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை முதன்முறையாக வெற்றிபெற்று ஆட்சியில் அமரவைத்ததில் பிரதானின் பங்கு முக்கியமானது. எனவே, அவரது பதவியை அவ்வளவு எளிதில் பறித்துவிடாது பா.ஜ.க தலைமை.

மேலும் பிரதான் ராஜினாமா செய்தால், அடுத்தடுத்து மற்ற துறைகளில் தவறுகள் நடக்கும்போது போராட்டங்கள் வெடித்தால், அந்தத் துறை அமைச்சர்களும் ராஜினாமா செய்யவேண்டியிருக்கும். அதோடு, எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்குப் பணிந்து ஒரு அமைச்சரைப் பதவி விலகவைத்தால், அது அரசின் பிம்பத்தைச் சிதைத்து, எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய அரசியல் வெற்றியாக மாறிவிடும் என்றும் நினைக்கிறது பா.ஜ.க. எனவே, பிரதானின் இலாகா மாற்றப்பட்டாலும் படுமே தவிர, அவர் பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான்’’ என்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பா.ஜ.க ஆளும் மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகள், மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் சுமார் 100 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் அரசை நோக்கித் தற்போது மாணவர்களே கேள்வியெழுப்புகின்றனர். அந்தக் கேள்விகளை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், அடக்குமுறையைக் கையிலெடுப்பது ஜனநாயகத்துக்குப் பேராபத்து.

`ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் குரல்களுக்குச் செவிசாய்த்து, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’ என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வாரா பிரதமர் மோடி!