📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 06, 2026 01:01 AM

 மொபைல் போன் செயலியில் டாஸ்மாக் சரக்குகளை வாங்கலாம்

 மொபைல் போன் செயலியில் டாஸ்மாக் சரக்குகளை வாங்கலாம்

சென்னை: மது கடைகளில் உள்ள மதுபான வகைகளை, மது பிரியர்கள் மொபைல் போன் செயலியில் தேர்வு செய்து, பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி, மது கடைகளில் வாங்கி கொள்ளும் திட்டத்தை, டாஸ்மாக் தொடங்க உள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,048 கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது.

இந்த கடைகளுக்கு, மது பிரியர்கள் நேரில் சென்று, மதுபானங்களை வாங்க வேண்டும். பல கடைகளில், மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மது வகைகளை, பணியாளர்கள் தருவதில்லை. மேலும், மது பாட்டிலுக்கு, அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட, கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். இதனால், பலர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, மொபைல் போன் செயலி வாயிலாக, மது பிரியர்கள் தாங்கள் விரும்பும் மது வகைகளை தேர்வு செய்து, அதற்கு உரிய பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி, கடையில் மது பாட்டிலை பெற்றுக் கொள்ளும் வசதியை, இந்த வார இறுதியில் செயல்படுத்த, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகளை, மது பிரியர்களே தேர்வு செய்வதற்கு, டாஸ்மாக் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும்.

அந்த செயலியில், ஒருவர் செயலியை பயன்படுத்தும் இடத்தில் இருந்து, 10 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள, மது கடைகள் எங்கெங்கு உள்ளன என்பது தொடர்பான தகவல் தெரியும். எந்த கடையை தேர்வு செய்கிறாரோ, அந்த கடையில் உள்ள அனைத்து மது வகைகளின் இருப்பு விபரமும் செயலியில் தெரியும்.

அந்த மது வகையை தேர்வு செய்து, அதற்குரிய பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தியதும், ஒரு 'கியூ ஆர் கோடு' வரும். கடைக்கு சென்று, மொபைல் போனில் உள்ள, 'கியூ ஆர் கோடை' காட்டியதும், அதை கடை பணியாளர்கள், தங்களிடம் உள்ள விற்பனை முனைய கருவியில், 'ஸ்கேன்' செய்து, மது பாட்டிலை வழங்குவார்.

இதனால், விரும்பிய மது வகைகளை வாங்க முடிவதுடன், கூடுதலாக பணம் தர தேவையில்லை. இவ்வாறு கூறினார்.