மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் அன்வார்
பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மருத்துவப் பரிசோதனைகளையும் சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டுவருகிறார்.
தம்மைக் கவனிக்கும் நிபுணத்துவ மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப திரு அன்வார் அவ்வாறு செய்கிறார். அவர் இரு நாள்களுக்குத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியாவின் பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) அறிக்கை மூலம் தெரிவித்தது.
“தம்மைக் கவனித்துக்கொள்ளும் நிபுணத்துவ மருத்துவர்க் குழு தேவை என்று முடிவெடுத்தப் பரிசோதனைகளையும் சிகிச்சை முறைகளையும் பிரதமர் தற்போது மேற்கொண்டுவருகிறார்,” என்று பிரதமர் அலுவலக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பரிசோதனைகள், சிசிக்கை முறைகள் குறித்த தகவல்களை அறிக்கை வெளியிடவில்லை. மருத்துவப் பரிசோதனைகளும் சிசிக்கை முறைகளும் சீராக நடக்கவேண்டும் என்றும் அவர் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் மலேசியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
“பிரதமர் விரைவில் தமது பணிகளுக்குத் திரும்ப அவர் மேற்கொள்ளும் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் ஆகியவை சார்ந்த விவகாரங்கள் சீராகவேண்டும் என்றும் அவர் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.