மது கடைகளை மூடக்கோரி போராடிய மாணவிகள் மீது தாக்குதல் தவெக அரசுக்கு சீமான் கண்டனம்
மது கடைகளை மூடக்கோரி போராடிய மாணவிகள் மீது தாக்குதல் தவெக அரசுக்கு சீமான் கண்டனம்
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயங்கொண்டம் அருகே பள்ளி செல்லும் வழியில் மாணவச் செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய மாணவிகளின் கையைக் கிழித்து காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக் கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டதாக கூறும் தவெக அரசின் பட்டியலில் அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் இயங்கிய மதுக்கடை இடம்பெறாமல் போனது எப்படி? பள்ளி செல்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? கல்வி கற்பதை விட்டுவிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவ கண்மணிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு ஆளாக்கியது மனித பேரவலம் இல்லையா?
மாணவிகள் போராடும் வரை மதுக்கடைகளை மூடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? மாணவிகள் போராடிய பிறகும், மதுக்கடைகளை மூடாமல் காவல்துறையை ஏவித் தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மை இல்லையா? பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளை காயப்படுத்த தவெக காவல் துறைக்கு எப்படி மனசு வந்தது? கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனித தீர்த்தமா?
மாணவிகளை தாக்கிய காவல்துறையினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவிகளின் அறப்போராட்டத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n