மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஸ்டாலின், பழனிசாமி பிரச்சார தேதிகள் அறிவிப்பு
தாராபுரம்: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோர் வாக்குசேகரிக்க உள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரத்தில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.இதன்படி தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் அக். 2-ம் தேதி தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மேலும் மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமனை ஆதரித்து வரும் அக். 3-ம் தேதி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் தாராபுரம் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கன்னிவாடி, மூலனூர், கொளத்துப்பாளையம், உப்புத்துறைபாளையம் ஆகிய இடங்களில் செப்.27-ம் தேதியும் குண்டடம், மானூர்பாளையம், உப்பாறு அணை, பொன்னாபுரம் பகுதிகளில் 28-ம் தேதியும் அக்.2-ம் தேதி தளவாய்பட்டணம், தாராபுரம் நகரிலும் பிரச்சாரம் செய்கிறார்.