மதுராந்தகம், தாராபுரம்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. அ.தி.மு.க-வில் இருந்து கட்சித் தாவிய இரண்டு எம்.எல்.ஏ-க்களும் மேற்படி ’தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற’ மீண்டும் அதே இடத்தில் போட்டியிடுகின்றனர். அக்டோபர் 6 அன்று தேர்தலும், அக்டோபர் 9-ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து, வாக்களித்த மக்களின் விரல்களில் மை காய்வதற்கு முன்பாகவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் சேர்ந்தனர். ஓட்டு என்பது மக்களின் உரிமை-அதிகாரம் என்றெல்லாம் ஆளும் வர்க்கம் பீற்றித் திரியும் பிரச்சாரத்தை, “அதெல்லாம் ஒரு வெங்காயமுமில்லை, மக்களுக்கு எந்த அதிகாரமும் இங்கில்லை” என்று உடைத்து, சுக்கு நூறாக்கியது த.வெ.க. கும்பல்.
முதலாவது விடயத்தை தெளிவுபடுத்திக் கொள்வோம். ஒருவேளை அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தால், கட்சித் தாவிய ஆறு எம்.எல்.ஏ-க்களும் த.வெ.க-வுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. அ.தி.மு.க-விலிருந்து த.வெ.க-விற்கு சென்றதற்கு மேற்படி எம்.எல்.ஏ-க்கள் கூறிய காரணம் என்ன? தி.மு.க-வுடன் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியமைக்க முயற்சித்தது என்பதுதான்.
ஒருவேளை அப்படி நடந்தது உண்மையெனில், கட்சியிலிருந்து வெளியேறிய அ.தி.மு.க. கும்பல் கட்சித் தலைமை அவ்வாறு செய்யக் கூடாது என்று போராடியிருந்தால் அது நியாயம். ஆனால், அப்படி எந்த முயற்சியும் எடுக்காமல் த.வெ.க-வுக்கு தாவியது என்பது, திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்ட குதிரை பேரம் ஆகும். ஆட்சி அதிகாரத்திற்கான வெறி, பொறுக்கித் தின்பது என்பதைத் தாண்டி இதில் கொள்கை, கோட்பாடு ஒன்றும் கிடையாது.
இந்நிலையில், தற்போது இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் ஒருவேளை த.வெ.க. வெற்றி பெற்றால், அதை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட பிரம்மாண்டமான குதிரை பேரம் தொடங்கக்கூடும். அதனடிப்படையில் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.
படிக்க: விஜய்யின் துரோக ஆட்சி – நூறு நாட்களே சாட்சி!
அடுத்து, இடைத்தேர்தல் குறித்து பரிசீலிப்போம். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த கே.சுதன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் முடிந்த மிகக் குறுகிய காலத்திலேயே ராஜினாமா செய்து, வேறு கட்சியின் சின்னத்தில் அதே தொகுதியில் போட்டியிடும் நடவடிக்கை “ஜனநாயகத்தின் கேலிக்கூத்து” என்று கூறியுள்ளது. மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் உரிய காரணமின்றி ராஜினாமா செய்வது வாக்காளர்களை அவமதிப்பதாக அமைகிறது என்று கருத்து தெரிவித்துள்ளது.
இத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை உருவாக்குவது குறித்தும், இடைத்தேர்தல் செலவை ராஜினாமா செய்த வேட்பாளர்களிடமிருந்து வசூலிப்பது குறித்தும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அடடா, என்ன ஒரு பொறுப்பான விமர்சனம் என்று நாம் மகிழ்ச்சியடைய வேண்டியதில்லை. இதையெல்லாம் கூறிய நீதிபதிகள், “தேர்தல் அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்டதால், இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது” என்று முரணாக உத்தரவைப் பிறப்பத்துள்ளனர்.
இதனை எப்படிப் பார்ப்பது? அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவி, அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடுவது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து என்று கூறுகின்ற நீதிமன்றம், சட்டப்படி தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று கூறி மறுத்துவிட்டது. ஓட்டுப் போட்ட மக்களை எம்.எல்.ஏ-க்கள் ஏமாற்றியுள்ளார்கள், மக்களின் ‘ஓட்டுரிமை’யை மதிக்கவில்லை, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது எனும்போது இடைத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அவ்வாறு செய்யாமல், அதே கேலிக்கூத்து அரங்கேற அனுமதிப்பதை எப்படிப் பார்ப்பது? அப்படியென்றால், ‘ஜனநாயகத்தின் கேலிக்கூத்து’ என்ற விமர்சனம் இடைத்தேர்தலை அனுமதித்த நீதிமன்றத்தின் அணுகுமுறைக்கும் பொருந்துமல்லவா…
நாம் முதன்மையாகப் பார்க்க வேண்டியது என்ன? ‘இந்திய ஜனநாயகத்தில்’ எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவுவதும், குதிரை பேரங்கள் நடத்துவதும், கேலிக்கூத்தான முறையில் இடைத்தேர்தல்களை நடத்துவதும் புதிய ஒன்றல்ல. திருமங்கலம், ஆர்.கே நகர் ஃபார்முலாக்கள் நாம் அறிந்தவை. இப்படிப்பட்ட கேடுகெட்ட நடைமுறைகளின் ஊடாகத்தான் இந்திய ஜனநாயகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் இத்தகைய கேலிக்கூத்தை அரங்கேற்றுவதில் பா.ஜ.க-தான் முன்னுதாரணம். ஆனால், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கும்பலே அதிர்ச்சியடையும் வகையில் குதிரை பேரங்களை நடத்தி, தனது செயல்பாடுகளின் மூலம் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்ளப்படுவதன் யோக்கியதையை த.வெ.க. கும்பல் அம்பலப்படுத்தி வருகிறது என்பது முக்கியமானது. அதன் துலக்கமான நடவடிக்கைதான் அ.தி.மு.க-வில் போட்டியிட்ட அதே வேட்பாளர்களை இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட வைத்துள்ளதாகும்.
இங்கு பிரச்சினையை அரசியல் கட்சிகளுடன் மட்டும் சுருக்கிப் பார்ப்பதுதான் உள்ளது. உண்மை அதுவல்ல, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் இணைந்தே ஆளும் வர்க்க நலனுக்காக இக்கேலிக்கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம், இத்தகைய ஆளும் வர்க்க நடைமுறைகளில் மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை என்பதுதான். இதை மறைப்பதற்கு அரசியல் கட்சிகளை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அதிகார வர்க்கத்தின் இதர பிரிவுகள் யோக்கியமானவை என்பது போல காட்டி, மக்களுக்கு எந்தவித உரிமையும் இல்லாத இந்த போலி ஜனநாயகத்தை காப்பாற்றிக் கொள்கிறார்கள். மீண்டும் மக்களை இதிலேயே சுழல வைக்கிறார்கள்.
தற்போது நடந்து கொண்டிருக்கின்ற அசிங்கங்களைப் பார்த்து, ஆளும் வர்க்கப் பிரிவைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்களே தற்போது நடக்கின்ற இடைத்தேர்தலை திணிக்கப்பட்ட தேர்தல் என்கின்றனர்.
ஆனால், அதைத்தாண்டி இந்தத் தேர்தல் கட்டமைப்பில் என்ன கேலிக்கூத்துகள் நடந்தாலும், அதை கேள்வியெழுப்பவோ, தீர்வு காணவோ மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வதுதான் முக்கியமானதாகும். இதற்கேற்பவே, இந்தக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளும் செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதே அடிப்படையானது. இது திணிக்கப்பட்ட தேர்தல் என்பதல்ல; இக்கட்டமைப்பில் தேர்தல் என்பதே ஆளும் வர்க்க கும்பலின் நலனுக்காக மக்கள் மீது திணிக்கப்பட்டதுதான் என்பதுதான் நாம் உணர வேண்டிய உண்மை.
மக்களைக் கொள்ளையடிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் தேர்தல் கட்டமைப்பில், நேர்மையான தேர்தல் என்றைக்கும் சாத்தியமில்லை. மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதையே தொழிலாகக் கொண்டவர்கள்தான் இங்கு இயங்க முடியும். ஆதிக்கம் செலுத்த முடியும். இதனைத் தடுக்க மக்களுக்கு எந்த வழியும் இங்கில்லை.
எனவே, மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும், தவறு செய்தால் தண்டிக்கவும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்ற மாற்றுக் கட்டமைப்பில்தான், அதாவது பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசில்தான் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடியும். மக்கள் நலனை உத்தரவாதப்படுத்த முடியும். அது மட்டுமே ஒரே மாற்று. அந்த அடிப்படையில் விவாதங்களை தீவிரப்படுத்துவோம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads