📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 17, 2026 08:31 AM

மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் இல்லை அறங்காவலர்களுக்கு அமைச்சர் பதிலடி

மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் இல்லை அறங்காவலர்களுக்கு அமைச்சர் பதிலடி

மதுரை: ''மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் இல்லை. அறங்காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் தேவை பூர்த்தி செய்யப்படும்,'' என, அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

மீ னாட்சி கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் செய்வதாக த.வெ.க., அரசு குறித்து நேற்று முன்தினம் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி, அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், சுப்புலட்சுமி குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், நேற்று கும்பாபிஷேக ஏற்பாடுகளை அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆய்வு செய்தனர். அதன்பின், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:

கும்பாபிஷேக ஏற்பாடுகள் ௧00 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அனைத்து துறையினரும் இரண்டு 'ஷிப்டு'களாக பணிபுரிகின்றனர். மின்தடை ஏற்படாமல் இருக்கவும், ஒருவேளை ஏற்பட்டால், 2 நிமிடத்தில் மின்சப்ளை கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவில் மேல்தளத்தில் பொதுமக்கள் 2 ஆயிரம் பேரை அனுமதிக்க குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, 'பாஸ்' வழங்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தில் அரசியல் இல்லை. மக்கள் பாதுகாப்பு சார்ந்து மட்டுமே பணியாற்றுகிறோம். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்ந்தது.

அதில் யாரும் தலையிட முடியாது. அறங்காவலர்கள் குழுவை தொடர்பு கொண்டு அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்துள்ளேன். 'பாஸ்' விஷயத்தில் நாங்கள் எந்த தலையீடும் செய்யவில்லை. இதுவரை அதை கண்ணில் கூட நான் பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் முன் தர்ணா கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தமிழ் ஓதுவார்களை கருவறைக்கு அனுமதிக்கவில்லை என குற்றஞ்சாட்டி சேலம் சத்தியபாமா தலைமையில் தமிழ் ஓதுவார்கள் அம்மன் சன்னதி முன் சித்திரை வீதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், 'தமிழ் ஓதுவார்களை ஓரம்கட்டி விட்டு சமஸ்கிருத ஓதுவார்களை மட்டும் அனுமதிக்கின்றனர். தமிழ் ஓதுவார்கள் அனுமதி குறித்து இணை ஆணையர் எதுவும் தெரிவிக்கவில்லை' என்றனர். அவர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு நடத்தினார்.

தமிழுக்கு முன்னுரிமை தமிழ் ஓதுவார் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், ''தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

'' அரசால் அங்கீகரிக்கப்பட்ட 27 ஓதுவார்கள் செப்., 11 முதல் கோவிலில் இருக்கின்றனர். த.வெ.க., அரசு எப்போதும் தமிழுக்கு முன்னுரிமை தரும். கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறை செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு,'' என்றார்.