முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்
சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கியமான 214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959ன்படி, கோயில் நிர்வாகத்தில் அறங்காவலர் குழுவுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழுவின் வழிகாட்டுதலில்தான் கோயில் செயல் அலுவலர் பணியாற்ற வேண்டும் என்பது விதி. கோயில்களின் ஆண்டு வருமானம் அடிப்படையில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கும் மேல் உள்ள கோயில்களுக்கான அறங்காவலர்களை மாநில அரசு நியமிக்கும். அதற்கும் குறைவாக வருவாய் உள்ள கோயில்களுக்கு அறநிலையத் துறை ஆணையரும் ரூ.2 லட்சம் வரை வருவாய் உள்ள கோயில்களுக்கு துறை இணை ஆணையரும் அறங்காவலர் குழுவை நியமிப்பார்கள்.
இந்தச் சூழலில், நிர்வாகக் காரணங்களுக்காக, தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் பணியாற்றி வந்த பரம்பரை அல்லாத அறங்காவலர்களைப் பதவி விலகுமாறு அறநிலையத் துறை அண்மையில் அறிவுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, பலரும் பதவி விலகினர். இந்த நிலையில், காலியாக உள்ள அந்த இடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.