📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 04:30 AM

முன்னோரின் அடிச்சுவடு தேடிய உறவுகள்

முன்னோரின் அடிச்சுவடு தேடிய உறவுகள்

சிங்கப்பூரில் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் தம் குடும்பத்துடன் வசித்துவரும் 73 வயது அப்பன்னா வீரன்னா, மலேசியாவின் பத்து காஜாவில் பிறந்தவர்.

அவர் பிறப்பதற்கு முன்பு நிகழ்ந்த ஜப்பானியப் படையெடுப்புக் காலகட்டத்தில் அவரின் தந்தையார் திடீரென தாய்லாந்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். பிரிட்டிஷ் காலனித்துவக் காலத்தில், வயல்வெளிகளில் வேலை செய்தோரை நிர்வகிக்கும் கண்காணியாக அவரது தந்தையார் பணிபுரிந்தார்.

அத்தகையோரில் சிலரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் ஆகியோர் தாய்லாந்தின் ரயில்வேயைக் காண மேற்கொண்ட பயணத்தில் திரு அப்பன்னாவும் இணைந்துகொண்டார்.

மரண ரயில்வே ஆர்வலர் குழு - மலேசியா (Death Railway Interest Group Malaysia) என்ற அந்தக் குழு, இந்தியச் சமூகத்தினருக்காகக் கடந்த 12 ஆண்டுகளாக இத்தகைய பயணத்திற்கு ஏற்பாடு செய்துவருகிறது.

மலேசியத் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றில் அந்தக் குழுவைப் பற்றி கடந்த ஆண்டு படித்ததை அடுத்து, அந்தக் குழுவின் நிறுவனர் பி. சந்திரசேகரனைத் தொடர்புகொண்டதாகத் திரு அப்பன்னா கூறினார்.

“ரயில்வேயிலிருந்து திரும்பிய என் தந்தையார் 1990 வரை வாழ்ந்தார். அங்கு அவர் சமையல்காரராக இருந்ததால் பலருக்கு ஏற்பட்ட ஆபத்துகளை என் தந்தை எதிர்நோக்கவில்லை. ஆயினும், அவர் திரும்பி வருவார் என்பதை யாரும் கனவிலும் நினைக்கவில்லை,” என்று திரு அப்பன்னா கூறினார்.

தொடக்கத்தில் வேலை செய்ய விரும்பிய தமிழர்கள், நல்ல சம்பளம் தரப்படும் என நம்பி, தாங்களாகவே சென்றிருந்தனர். இந்தியாவின் விடுதலைக்கும் திரு நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் ஆதரவாக இருந்த இந்தியச் சமூகத் தலைவர்கள், ஜப்பானிய நிர்வாகத்தினரை நம்பி, அவர்களுக்குப் பணியாற்றும்படி மக்களை ஊக்குவித்தனர்.

ஆனால், சென்றவர்களில் பலர் மாயமானதைக் கண்டு பின்னர் ரயில்வே பணிகளைச் செய்ய தமிழர்கள் அஞ்சியபோது, ஜப்பானிய ஆட்சியாளர்கள் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்துச் சென்றனர். இறந்தவர்களில் பலர், 415 கிலோமீட்டர் வரை நீண்டிருந்த ரயில் தடத்திற்கு அருகே எந்த அடையாளச் சின்னமுமின்றிப் புதைக்கப்பட்டனர்.

ரயில் தடத்தின் கிட்டத்தட்ட 304 கிலோமீட்டர் பகுதி தாய்லாந்திலும், ஏறத்தாழ 111 கிலோமீட்டர் பகுதி மியன்மாரிலும் உள்ளது.

அன்றைய ஜப்பானியப் பேரரசு, 1942ல் ரயில் பாதையின் கட்டுமானத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

கோரல் சீ, மிட்வே போன்ற கடல் தடங்களின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நிலவழித்தடத்தை அமைப்பதில் மிகுந்த அவசரம் காட்டிய ஜப்பானிய ஆட்சியாளர்கள், 15 மாதங்களில் ரயில்வேயை அமைத்தனர்.

ஆனால், அதற்காகப் பல்லாயிரக்கணக்கான உயிர்களும், கண்ணீரும், சிதறடிக்கப்பட்ட குடும்பங்களும் விலையாகக் கொடுக்கப்பட்டன.

உணர்வுகளுடன் பின்னிப்பிணைந்த பயணம்

தங்கள் மூதாதையர் சென்றிருந்த ரயில் தடம் வழியாக இந்தக் குழுவினரும் புறப்பட்டனர். மே 28ல் தொடங்கிய ரயில் பயணம், தாய்லாந்தின் காஞ்சனாபுரி வரையிலும் நீண்டது.

முன்னாளில் ஏழு, எட்டு நாள்கள் வரை நீடித்த இந்தப் பயணம், தற்போது ஒரே நாளில் முடிகிறது. மலேசியாவின் வெவ்வேறு நகரங்களைச் சேர்ந்த குழுவினர், வெவ்வேறு நிலையங்களில் ஏறிக்கொண்டனர்.

பயணத்தில் பங்கேற்றவர்கள், வழிநெடுகத் தங்களது குடும்பத்தாரின் அனுபவங்களைப் பகிர்ந்ததாகத் திரு அப்பன்னா கூறினார்.

“இந்த வரலாற்று நிகழ்வால் தங்கள் குடும்பம் எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதை ஒவ்வொருவரும் கூறி வந்தபோது நெஞ்சம் கனத்தது,” என்றார் அவர்.

தாய்லாந்திலுள்ள ரயில் தடங்களை அடைந்ததும் குழுவில் பலர், மாண்ட தங்கள் உறவுகளை நினைத்து அழுதனர். உயிரிழந்தோரின் ஆன்மா அமைதியடைய வழிபாடும் செய்தனர். எல்லாம் முடிந்துவிட்டது என்ற ஆற்றாமையைப் பலர் உணர்ந்ததைக் கண்டதாகவும் ஏற்பாட்டாளர் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான டாக்டர் அலமேலு தங்கநாதன், தமது பணிக்காலத்தில் ஒருமுறை அந்தப் பகுதிக்குச் சுற்றுலா சென்றதை நினைவுகூர்ந்தார். இந்தப் பயணத்தில் சேரத் திட்டமிட்டிருந்தும் உடல்நலக்குறைவால் அவரால் இணைய இயலவில்லை.

ரயில் தடம் அமைக்கும் பணிகளுக்காக பேராக் மாநிலம், தாப்பா தோட்டத்திலிருந்து தம் உறவினர் பலரும் அக்கம்பக்கத்தினரும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார். மறைந்தவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களது நினைவைப் பாதுகாப்பதில் தம் உறவினர் ஆர்வம் காட்டுவதாக டாக்டர் அலமேலு குறிப்பிட்டார்.

ஆர்வலர் குழுவின் சவால்கள்

2015ல் தாம் கோலாலம்பூரில் தங்கியிருந்தபோது வெவ்வேறு நண்பர்கள் குழுவினருடன் உரையாடி இந்தக் குழுவை அமைக்க முடிவு செய்ததாக 66 வயது திரு சந்திரசேகரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“பிறகு 2016ல் நாங்கள் பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். அது ‘மரண ரயில்பாதை குறித்த தேசிய கருத்தரங்கம்’என்று அழைக்கப்பட்டது. பாரம்பரியத் துறைக்குப் பொறுப்பான அப்போதைய அமைச்சரை எங்கள் நிகழ்ச்சியை முறைப்படி தொடங்கிவைக்க அழைத்திருந்தோம். மேலும், எங்களால் முடிந்தவரை, உயிர்பிழைத்தவர் பலரையும் மேடைக்கு வரவழைத்து, அவர்களைச் சிறப்பிக்க ஏற்பாடு செய்தோம்,” என்று அவர் கூறினார்.

ரயில் தடங்களைப் பார்வையிடும் பயணங்களை நடத்த தாம் அணுகிய சுற்றுப்பயண நிறுவனங்கள் தயங்கியதால் தாமும் தம் குழுவினரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகத் திரு சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

மலேசிய நண்பன், மக்கள் ஓசை, முன்னைய தமிழ் நேசன் போன்ற தமிழ்ச் செய்தித்தாள்கள் வழியாகவும் ஆங்கில ஊடகங்கள் வழியாகவும் தங்களது குழுவைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பி வந்ததையும், ஆசிரியர், ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளைத் தாம் செய்துவந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் ஆக அண்மையில் மேற்கொண்டிருந்த பயணத்தைப் பற்றிய கட்டுரையை ‘ஃபிரீ மலேசியா டுடே’ செய்தித்தளம் கடந்த மாதம் வெளியிட்டது.

ஆங்கில ஊடகங்களைக் காட்டிலும் தமிழ் ஊடகங்கள்வழி கிடைத்த வரவேற்பு பெரிதாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். சமூக ஊடகங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

“முடிவில், ரயில் தடத்தில் வேலை செய்து இறந்தோரின் நினைவைக் குறிக்கும் பெருஞ்சின்னமும் தகவல் நிலையமும் எழுப்பப்பட வேண்டும் என்பதே நான் வலுவாக முன்வைக்கும் கோரிக்கை. இது அரசாங்க நிலையில் பேசப்பட வேண்டும் என விரும்புகிறேன். தாய்லாந்தில் மட்டுமன்றி, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இது தொடர்பான வேண்டுகோளை மக்களும் அரசாங்கங்களும் முன்வைக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரிலும் விழிப்புணர்வு தேவை

ஜப்பானிய ஆட்சிக் காலத்தின்போது இந்தியச் சமூகத்தினர், குறிப்பாகத் தமிழர்கள், கொடுமைக்கு ஆளானதற்கு மரண ரயில்வே திட்டம் பெருஞ்சான்று எனச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ராஜேஷ் ராய் தெரிவித்தார்.

“ஜப்பானியர் ஆக்கிரமிப்பின்போது இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை என்ற ஒரு தவறான வரலாற்றுப் பார்வை சிலரிடையே உள்ளது. மக்கள் பெரும்பாலும் இந்திய தேசிய ராணுவத்தைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்; ஆனால், எளிய இந்திய மக்கள் அனுபவித்த துயரங்களை மறந்துவிடுகிறார்கள்,” என்று இணைப் பேராசிரியர் ராய் கூறினார்.

இந்த மாபெரும் உயிரிழப்புகளால், மலாயாவிலும் சிங்கப்பூரிலும் இந்தியர்களின் மக்கள்தொகை கணிசமாகக் குறைந்ததாகக் குறிப்பிட்ட அவர், அது சமூக அளவிலும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றும் சொன்னார்.

இவ்வாறு ஆண்மக்களை இழந்த குடும்பங்களின் பாதிப்பு மூன்று, நான்கு தலைமுறைகளைக் கடந்து இன்றளவும் சமூகப் பிரச்சனைகளாக எதிரொலிக்கிறது. தந்தை, அண்ணன், மாமா இன்றி, கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லாது பலர் வளர்ந்த நிலையில் மதுப்பழக்கம், பிற்போக்கான வாழ்க்கைமுறை போன்ற பிரச்சினைகளும் தலைதூக்கின.

“ரயில் தடம் அமைக்கும் பணிகளில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குச் சென்ற பலர் திரும்பவே இல்லை; உயிர் பிழைத்துத் திரும்பியவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கும் நாட்பட்ட நோய்களுக்கும் ஆளாகியிருந்தனர்,” என்று டாக்டர் ராஜே‌ஷ் கூறினார்.

குடும்ப உறுப்பினர்களை இழந்த சிங்கப்பூரர்கள் முன்வந்து தம்மைத் தொடர்புகொள்ளும்படி திரு சந்திரசேகரன் கேட்டுக்கொண்டார்.

“கடுமையான வேலையால் ரயில் தண்டவாளத்தில் சாகடிக்கப்பட்ட பிரிட்டிஷ் போர்க்கைதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன; நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதுபோல, உழைத்து மடிந்த ஆயிரக்கணக்கான நம் முன்னோரை நாமும் மறக்காமல் இருக்க வேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.