முந்தைய அரசு திட்டங்கள் பெயர் மாற்றப்படுடுகிறதா? - அமைச்சர்கள்
சென்னை: முந்தைய திமுக, அதிமுக அரசுகளின் திட்டங்கள் பெயர் மாற்றப்பட்டு புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் - திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.
அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது:
அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம், அண்ணன் சீர்திட்டம் என்றும், மடிக்கணினி திட்டம், வெற்றி மடிக்கணினி திட்டம் என்றும், விலையில்லா சைக்கிள் திட்டம், நவீன சைக்கிள் திட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்து புதிய திட்டங்கள்போல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிர்மல் குமார்: பழைய திட்டங்களுக்கு புதிய செயல்வடிவம் கொடுத்து அத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அமைச்சர் ஆதவ்
அர்ஜுனா: திமுக திட்டமோ, அதிமுக திட்டமோ நல்ல திட்டங்களை அப்டேட் செய்துள்ளோம். முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத்துக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்படுகிறது. அதுதான் எங்கள் முதல்வர்.
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு: திமுக ஆட்சியிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டன. அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அதே பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலு: அம்மா உணவகம் அதிமுகவின் தொலைநோக்கு திட்டம் ஆகும். திமுக ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: கடந்த திமுக ஆட்சியின்போது அம்மா உணவகங்கள் பெயரளவில்தான் இயங்கி வந்தன.
முன்னாள் முதல்வர் பழனிசாமி: புதிய ஆட்சியில் முந்தைய அரசு திட்டங்களைத் தொடர்வதில் பிரச்சினை இல்லை. திட்டங்களின் பெயரை மாற்றுவதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: ஒரு ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு புதிய ஆட்சியில் பெயர் மாற்றம் செய்வது ஒன்றும் புதிய முறையல்ல. பல திட்டங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தவெக எம்எல்ஏ ரவிசங்கர்: தவெக ஆட்சியில் எந்த அரசு திட்டத்திலும் முதல்வர் விஜய்யின் படம் இடம்பெறுவதில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.