முருகன் கோவிலில் தீபமேற்ற த.வெ.க., அரசு தயங்குவது ஏன்? பா.ஜ., தேசிய துணைத்தலைவர் கேள்வி
சென்னை: ‘‘தமிழகத்தில், முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமை மீட்டெடுக்கப்பட்டு உள்ளது,’’ என, பா.ஜ., தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., சார்பில், ‘ஜனநாயகத்தை காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்’ என்ற தலைப்பில், தேசியக் கொடி பேரணி, சென்னையில் இன்று (நவ.,29) நடந்தது. பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார்.
பேரணியில், மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி, மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர், கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றோர், காவடி துாக்கி, வேல் ஏந்தியபடி சென்றதோடு, ‘வெற்றிவேல் வீரவேல்’, ‘ஜனநாயகம் காப்போம்’ என கோஷமிட்டனர்.
பேரணியில், ராம் மாதவ் பேசியதாவது:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது, தமிழகத்தில் முருகப்பெருமானின் அருள் நிறைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமை மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு, உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்களுக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபம் ஏற்றியபோது, மக்கள் உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளும், பல்வேறு பகுதிகளில், தாமாக முன்வந்து தீபம் ஏற்றியதும் நெகிழ்ச்சி அளிக்கிறது.
முருகன் கோவிலில் தீபம் ஏற்ற, த.வெ.க., அரசுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்; உச்ச நீதிமன்ற உத்தரவை எவ்வாறு மீற முடியும்? உண்மையான மதச்சார்பின்மை என்பது, அனைத்து மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளையும் மதிப்பதே.
இவ்வாறு, அவர் பேசினார்.
நயினார் நாகேந்திரன் பேசுகையில், “இனி, கார்த்திகை நட்சத்திரம் வரும்போதெல்லாம், திருப்பரங்குன்றம் சென்று தீபம் ஏற்ற வேண்டும். முதல்வர் விஜய்க்கு தவறான வழிகாட்டுதல்கள் உள்ளன. படுகுழியில் பாதி சென்று விட்டார். முழுமையாக மூழ்கும் முன், தப்பித்து கொள்ளுங்கள். திருப்பரங்குன்றம் விவகாரம் ஆரம்பம் தான். இனி தான் ஆட்டமே உள்ளது,” என்றார்.