📅 Monday, 30 November 2026 IST | கார்த்திகை 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 30, 2026 01:32 AM

ஒசாகா ஹோட்டல் தீ: சிங்கப்பூரர் உடைமைகளை இழந்தார்

ஒசாகா ஹோட்டல் தீ: சிங்கப்பூரர் உடைமைகளை இழந்தார்

ஒசாகா: ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சுற்றுலா சென்ற சிங்கப்பூரர் இரவு உணவுக்கு வெளியே சென்றிருந்தபோது, அவர் தங்கியிருந்த ஹோட்டல் (தங்குவிடுதி) அறையில் தீப்பிடித்ததால் அவருடைய உடைமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) நிகழ்ந்த இத்துயரச் சம்பவம் குறித்து 32 வயது தொழில்முனைவரான லிம் வெய்யுங் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அன்றையதினம் இரவு 7.21 மணிக்கு உணவகத்திற்குச் சென்ற அவருக்கு, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவசரநிலை குறித்து ஹோட்டலிலிருந்து குறுஞ்செய்தி வந்தது. அறையில் தீப்பிடித்து அணைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பவ இடத்தில் காவல்துறையினரையும் தீயணைப்பு வீரர்களையும் சந்தித்ததையும் அறை முற்றிலும் கருகிச் சேதமடைந்ததையும் லிம் பதிவிட்ட படங்களும் காணொளிகளும் காட்டுகின்றன. காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் மிகவும் உதவியாகவும் அமைதியாகவும் செயல்பட்டதாகப் பாராட்டிய அவர், ஹோட்டல் நிர்வாகி கடுமையாக நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.

விடுமுறைக்குச் செல்லும்போது விளக்குகளையும் மின் இணைப்புகளையும் அணைப்பதில் தாம் மிகக் கவனமாக இருப்பதாகக் கூறிய லிம், $5,999 மதிப்புள்ள ‘சோனி’ புகைப்படக் கருவி உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

அறையில் தீப்பிடித்த காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

பாதுகாப்பாக இருப்பதாகத் தமது குடும்பத்தினரிடம் தெரிவித்த அவர், வெளியுறவு அமைச்சு, தனது ஹோட்டல் முன்பதிவுகளை ஏற்பாடு செய்துதந்த ஏர்பிஎன்பி இணையத்தளம், பயணக் காப்புறுதி முகவை ஆகியவற்றைத் தொடர்புகொண்டார்.

இச்சம்பவம் அவர் தொடர்ந்து மேற்கொள்ளவிருந்த ஹொக்கைடோ பயணத் திட்டத்தைப் பாதிக்கவில்லை என்றும் லிம் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் பேரிடர்களிலோ இதுபோன்ற அவசரகாலங்களிலோ சிக்கிக்கொள்ளும்போது உடனடியாக அருகில் உள்ள அதன் தூதரகங்களை அல்லது +65 6379 8800 எண்களில் அதன் சிங்கப்பூர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளும்படி பொதுமக்களை வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.