📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 30, 2026 12:04 AM

முதலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் பிறகு பிரதமராகலாம்

முதலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் பிறகு பிரதமராகலாம்

முதலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் பிறகு பிரதமராகலாம் - முதல்வர் விஜய்யை விமர்சித்த அன்பில் மகேஷ்

சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு பேசியது வருத்தம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Published : August 28, 2026 at 4:25 PM IST

திருச்சி: தேர்தலுக்கு முன்னும், பின்னும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகு விஜய் இந்தியாவின் பிரதமர் மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகலாம் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அன்பில் பொய்யாமொழியின் 27-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது போன்று, சட்டமன்றம், சண்டை மன்றமாக உள்ளது. தவெக அமைச்சர்கள், எதிர்க்கட்சி கேட்கும் கேள்விகளுக்கு அனைவரும் அசரும் அளவிற்கு பதில் கூறுகிறார்கள். யாரும் முக்கியமான கருத்துகளை சட்டமன்றத்தில் பேசுவதில்லை.

முதல்முறை சட்டமன்ற உறுப்பினராகி, முதல்முறை அமைச்சராக சட்டப்பேரவையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அனுபவம் தேவை. ஆனால் எத்தனை நாட்கள் அவர்கள் அனுபவத்திற்காக எடுத்துக் கொள்ளப் போகின்றனர்? அத்துடன், ஆளும்கட்சியனர் எதற்கெடுத்தாலும் கூச்சலிலும், சண்டையிலும் ஈடுபடுகிறார்கள். ஆகையால், சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்ப்பதையே நிறுத்திவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது விவாதங்களை நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளை உள்வாங்கி அதன்பின் பதிலளிக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கக்கூடிய அமைச்சர்கள் புரிதல் இல்லாமல் தொடர்ந்து கூச்சல், சண்டையிட்டு வருகிறார்கள். இதேபோல், சட்டப்பேரவையில் ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தொடர்ந்து விவாதங்களுக்கு பதில் அளித்து வருகிறார்கள். அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தால் மட்டுமே நன்றாக இருக்கும்.

அமைச்சர் வன்னி அரசு தேர்தலுக்கு முன்பாக, திமுக - தவெக இடையே நடக்கும் தேர்தல் சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று கூறினார். தற்போது சட்டமன்றத்திற்கு சென்ற பின்னர் அவர் பேசுவது எங்கள் அனைவருக்கும் சங்கடமாக உள்ளது. 'நீல சாயம் வெளுத்து போனது டும் டும்' என்று சொல்வது போன்று உள்ளது.

சட்டப்பேரவையில் நின்று இதேபோன்று பட்டியலின மக்களுக்கு நாங்களும் பல திட்டங்களை கொண்டு வருவோம் என்று சொன்னால் பயனடையப் போவது பட்டியலின மக்கள் தான். ஆனால் நாங்கள் மாறிட்டோம், சட்டையை மாற்றி கொண்டோம், என்பதற்காக சட்டப்பேரவையில் இதுபோன்று பேசுவது வருத்தம் அளிக்கிறது.

நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசும்போது அவருக்கான பொறுப்பை முழுமையாக உணர்ந்து தெளிவான பதிலை வழங்க வேண்டும்.

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு நிலைப்பாட்டில் திமுக அன்று முதல் இன்று வரை உறுதியாக இருக்கிறது. மாநில உரிமையை காப்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆகையால் தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசு ஏற்கனவே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்துவிட்டார்கள். ஆகையால் மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாட்டின் ஒற்றுமையை நிரூபித்திருக்க வேண்டும்.

அப்போதுதான் கர்நாடகாவில் இருக்கக்கூடிய மக்களுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளை தாண்டி, அவர்களின் உரிமையில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். இதற்கான வாய்ப்பை நாம் தவற விட்டு விட்டோம்.

தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்வி நிதி சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் விவாதிக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிராக கேள்வியையும் எழுப்பவில்லை. ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நிலுவையில் உள்ள அனைத்து நிதிகளையும் பெற வேண்டும். அவ்வாறு பெற்றால் மட்டுமே பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த முடியும். இல்லையென்றால் அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு அமைச்சர்கள் சட்டப்பேரவையில் பேசுகையில் மத்திய அரசு, பாஜக அரசு என கூற மறுக்கிறார்கள். அத்துடன், தமிழ்நாட்டிற்கான அனைத்து நிதியையும் பெறுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தல் முடிந்த பிறகும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகு அவர் இந்தியாவின் பிரதமர் மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகலாம்" என தெரிவித்தார்.