📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 25, 2026 10:02 AM

முதல்வர் குறித்து அவதுாறு : திமுக நிர்வாகிக்கு வலை

முதல்வர் குறித்து அவதுாறு : திமுக நிர்வாகிக்கு வலை

ராயக்கோட்டை: முதல்வர் விஜய் குறித்து அவதுாறு வீடியோ வெளியிட்ட தி.மு.க., நிர்வாகியை, போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, போடம்பட்டியை சேர்ந்த தி.மு.க., விவசாய அணி மாநில துணை செயலர் அரியப்பனின் மகன் அன்பானந்தம், 30. தி.மு.க.,வின் 'ஜென்சி' பிரிவு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்.

நேற்று முன்தினம் சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், குட்டி கதை சொல்லி, 'உங்க அப்பாவை காணோம்' என, கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அன்பானந்தம், தன் சமூக வலைதள பக்கங்களில், முதல்வர் விஜய், நடிகை திரிஷாவுடன் பிறந்த நாள் கொண்டாடியதாக விமர்சித்து, வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், 'முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் போன் செய்திருந்தார். அவர், 'என் அப்பா எங்கே?' என, கேட்டார். அவரது அப்பா எங்கே இருக்கிறார் என கண்டுபிடித்து விட்டேன். ஒரு நடிகை வீட்டில் கேக் வெட்டிக் கொண்டிருக்கிறார். நம் முதல்வர், எங்கே இருக்கிறார் என்பது, இன்னொருவர் சொல்லித்தான், ஜேசன் சஞ்சய்க்கு தெரிகிறது என்றால் பார்த்துகோங்க' என, வீடியோவில், அன்பானந்தம் பேசியுள்ளார்.

மேலும் ஒரு வீடியோவில், 'விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா, விஷம் வைத்து விடுவார். அதனால் தான் அவரை பனையூர் பக்கம் விடவில்லை' என, கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பரவிய நிலையில், ராயக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் மாலை, கெலமங்கலம் த.வெ.க., கிழக்கு ஒன்றிய செயலர் மூர்த்தி, 37, புகார் அளித்தார். ராயக்கோட்டை போலீசார் அன்பானந்தம் மீது வழக்கு பதிவு செய்தனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., தலைமையில், 10க்கும் மேற்பட்ட போலீசார், நள்ளிரவில் அன்பானந்தத்தை கைது செய்ய, அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

அரியப்பன், வேப்பனஹள்ளி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன் ஆகியோர், 'வாரன்ட் இன்றி நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?' என, கேள்வி எழுப்பினர். அன்பானந்தம் வீட்டில் இல்லாததால், போலீசார் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே, கிருஷ்ணகிரி தி.மு.க., நிர்வாகிகள், நேற்று காலை ராயக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜிடம், 'கைது நடவடிக்கை மேற்கொண்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என எச்சரிக்கை விடுத்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், ஆத்துாரில், ஜூன் 20ல் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து அவதுாறாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசியதாக, த.வெ.க., நகர செயலர் செல்வமுருகன், ஆத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார், அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், 'வழக்குகள் போட்டு தி.மு.க., தொண்டனை அச்சுறுத்த இயலாது. மக்களின் உரிமைக்கும், வாழ்வியலுக்குமான எங்கள் போராட்டம் தொடரும். உண்மையை உரக்க பேசுவோம். மக்கள் சக்தி வெல்வது நிச்சயம்' என, தெரிவித்துள்ளார்.