முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்; அரசுப் பள்ளி நிகழ்வில் குத்தாட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன்
முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்; அரசுப் பள்ளி நிகழ்வில் குத்தாட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன்
மேலூர் அரசுப் பள்ளி வளாகத்தில் திருமண விழாவிற்கு வைத்தது போல, தவெக கட்சியினர் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published : June 21, 2026 at 1:33 PM IST
மதுரை: மேலூர் அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்வில் அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் தவெக நிர்வாகிகள் குத்துப் பாட்டுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை அவரது கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முன்கூட்டியே கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அண்மையில் பிறந்த நாள் கண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (ஜூன் 19) பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, மதுரை மாவட்டம் மேலூரில் 'மாரத்தான்' நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தவெக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 'போதை இல்லா தமிழகம்' மற்றும் 'பெண்கள் பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 பிரிவுகளாக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி பெரியகடை வீதி, செக்கடி பஜார், பேருந்து நிலையம், சானல் ரோடு, அரசு மருத்துவமனை சாலை, நகைக்கடை பஜார் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, அரசுப் பள்ளியில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில், 'வாடி வாடி வாடி கைப்படாத சிடி' மற்றும் 'தளபதி கச்சேரி' என்ற திரைப்பட பாடல்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் தவெக கட்சி மேலூர் நகர இணைச் செயலாளர் சுபாஷினி ஆகியோர் நடனம் ஆடினர்.
அதேபோல, மேலூர் அரசுப் பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, திருமண விழாவிற்கு வைத்தது போல, தவெக கட்சியினர் விளம்பரப் பதாகைகளை வைத்திருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.
கல்வி நிறுவன வளாகத்தில் கட்சி சார்ந்த விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டது மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசுப் பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சி விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.