📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 27, 2026 11:30 PM

முதல்வர் விஜய் டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கிறார்

முதல்வர் விஜய் டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கிறார்

புதுடெல்லி: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற விஜய், அங்கு இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, தனி விமானத்தில் சென்ற அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய்க்கு, தமிழ்நாடு காவல்துறை சிறப்புப் படையணி சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

புதன்கிழமை (மே 27) மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வு, தமிழக மீனவர்கள் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள், திட்டங்கள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் அளித்தார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் விஜய் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சந்திப்பு பத்து நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

தனது டெல்லி பயணத்தின்போது இந்திய அதிபர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்துப் பேசவும் முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஆகியோரையும் அவர் மரியாதை நிமித்தம் சந்திக்க இருப்பதாக தமிழக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

அண்மைய காலங்களில் முதல்வர் விஜய் டெல்லி செல்வது இது மூன்றாவது முறை. இதற்கு முன்பு கரூர் துயரச்சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் இரண்டு முறை டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.