முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா-ஈரான் போர்? ட்ரம்ப் அறிவித்த 'மகா ஒப்பந்தம்'
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஈரானுடன் ஒரு சுமுகமான உடன்பாடு எட்டப்படும் தூரத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப்,"ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் ஒரு 'மகா ஒப்பந்தத்தை' மேற்கொண்டுள்ளோம்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், இந்த உடன்படிக்கை தொடர்பான இறுதி ஆவணப் பணிகள் மட்டுமே தற்போது மீதமுள்ளன என்றும், அடுத்த சில நாட்களில் அவை முழுமை பெற்று இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வார இறுதிக்குள்ளேயே ஐரோப்பாவில் இதற்கான முறையான கையெழுத்து விழா நடைபெறக்கூடும் என்று ட்ரம்ப் தெரிவித்தார். இந்த விழாவில் தான் நேரடியாகப் பங்கேற்கப் போவதில்லை என்றும், அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் அவர் விளக்கமளித்தார். உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது குறித்துப் பேசிய ட்ரம்ப், "இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே ஹார்முஸ் நீரிணைப் பகுதி கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறந்து விடப்படும்" என்றார். இந்த முக்கிய நீர் வழிப்பாதை திறக்கப்பட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத் தட்டுப்பாடு நீங்கி, உலகளாவிய பொருளாதாரப் பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இறுதி ஒப்பந்தம் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்று ஈரான் தரப்பு எச்சரிக்கையுடன் கூடிய விளக்கத்தை அளித்துள்ளது. இதுகுறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், "இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை. முன்மொழியப்பட்ட ஒப்பந்த உரையின் பெரும்பகுதி ஒப்புக்கொள்ளப்பட்டாலும், வாஷிங்டன் பேச்சுவார்த்தையின் போது 'அளவுக்கு அதிகமான கோரிக்கைகளையும்' புதிய நிபந்தனைகளையும் விதித்து வருகிறது. ஈரான் எந்தவொரு வெளிப்புற அழுத்தத்திற்கும் பணியாது; தனது சிவப்புக்கோடுகளை தாண்டாது" என்றார்.
கட்டுப்பாடு
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக, ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற உறுதிமொழியை அளித்துள்ளதாக ட்ரம்ப் கூறினார். "ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற உடன்படிக்கையை நாங்கள் எட்டியுள்ளோம். இந்த நோக்கத்திற்காகவே நாங்கள் இவ்வளவு தூரம் கடந்து வர வேண்டியிருந்தது, இது மிகப்பெரிய சாதனை" என்று ட்ரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளாரா என்ற கேள்விக்கு, "எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஆம் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்" என்று பதிலளித்தார்.