மூன்று வழித்தடங்களில் கவச் தொழில்நுட்பம்; ரயில்வே வாரியம் ஒப்புதல்
சென்னை : தெற்கு ரயில்வேயில் இரண்டாம் கட்டமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு உட்பட மூன்று வழித்தடங்களில், 'கவச்' தொழில்நுட்பத்தை செயல்படுத்த, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்களின் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இதனால், அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியை, விரைவு ரயில்கள் அதிகம் இயக்கப்படும் வழித்தடங்களில் படிப்படியாக செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில், 474 கி.மீ., துாரத்திற்கு, 150 கோடி ரூபாய் செலவில், தானியங்கி ரயில் பாதுகாப்பு முறை எனப்படும், 'கவச்' தொழில்நுட்பம் கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'கவச்' திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரயில் இன்ஜின், ரயில் பாதை, சிக்னல் என, மூன்றையும் இணைத்து உருவாக்கப்பட்டது தான் கவச் தொழில்நுட்பம். ரயில் பாதையின் நடுவில், ஒவ்வொரு 4 கி.மீ., துாரத்தில், 'சிப்'கள் பொருத்தப்படும்.
இந்த தொழில்நுட்பம், ரயில் ஓட்டுநர்களுக்கு, ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். ஒரே தடத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கை செய்வதோடு, தானாகவே பிரேக் அப்ளை செய்து, ரயிலின் வேகத்தை மட்டுப் படுத்தி, விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும்.
தெற்கு ரயில்வேயில், முதல் கட்டமாக, சென்னை - ஆந்திரா மாநிலம் கூடூர், சென்னை - அரக்கோணம் - ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா வழித்தடங்களில் 'கவச்' பாதுகாப்பு முறை அமைக்கும் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.
அடுத்த கட்டமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு 60 கி.மீட்டர் ; ஜோலார்பேட்டை - ஈரோடு இடையே 180 கி.மீட்டர் ; கேரளா மாநிலம் சோரனுார் - கர்நாடகா மாநிலம் மங்களூரு இடையே, 308 கி.மீ., துாரம், 'கவச்' தொழில்நுட்ப பாதுகாப்பு முறையை, 310 கோடி ரூபாயில் செயல்படுத்த, வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
டெண்டர் வெளியிட்டு, படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.