📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health July 31, 2026 04:30 PM

முழு மதுவிலக்கு வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

முழு மதுவிலக்கு வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களைத் தமிழக அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படாவிட்டால், மாநிலம் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என்று திரு அன்புமணி குறிப்பிட்டார்.

தமிழக அரசின் மருத்துவத் துறையில் பொதுச் சுகாதாரத்துறை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான மருத்துவர் குழந்தைசாமியும் மது விற்பனை தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததையும் அன்புமணி சுட்டிக்காட்டினார்.

“தமிழகத்தில், 1971ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது தொடங்கி, இப்போது வரையிலான 55 ஆண்டுகளில் இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் மதுவுக்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது” என்று மருத்துவர் குழந்தைசாமி எச்சரித்திருந்தார்.

மதுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகக் கூறிய திரு அன்புமணி, மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் பாதிப்பு, நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்ற பாதிப்புகள் அவற்றில் முக்கியமானவை ஆகும் என்று சொன்னார்.

“முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்ட போது, இந்த ஆட்சியில் மது கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

“ஆனால், ‘ரெஸ்டோ பார்’களைத் திறக்க அனுமதி அளிக்கவும், அரசு மதுக்கடைகளைத் தனியார்மயமாக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் இந்த நம்பிக்கையைக் குலைத்துவிட்டன,” என்று திரு அன்புமணி வருத்தம் தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“தமிழ்ச் சமுதாயத்தைக் குடிகார சமுதாயமாக மாற்றிவிடக் கூடாது. எனவே, மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.