மயிலாடுதுறை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
மயிலாடுதுறை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
திருமுல்லைவாசல் ஊராட்சி தொடுவாய் கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் மாவீரன் என்ற தமிழகத்தை சேர்ந்த மீனவர் இறந்துவிட்டார். அதேபோல், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யக்கூடாது என்று 8 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததோடு, 80 பேரை சிறையில் அடைத்துள்ளனர். அதுபற்றியும் அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
சவுதியில் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்களின் விஷயத்தில் அரசின் நடவடிக்கை என்ன என்று பேசினார். இதேபால தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது எப்போது என்பது பற்றி சிவக்குமார் (பாமக), செந்தில்செல்வன் (மதிமுக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), மாரிமுத்து (மார்க்சிஸ்ட்) ஆகிய உறுப்பினர்களும் பேசினர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாவீரன் (45), சங்கர்(40), பால்ராஜ்(38), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்(30) ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்றிருந்தனர். கடந்த 10.8.2026 அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஈரானிய கொள்ளையர்கள் அவர்களுடைய படகில் கொள்ளையடிக்க முயன்றதாக தெரிகிறது. கடற்கொள்ளையர்களை அவர்கள் தடுக்க முயன்றபோது, துப்பாக்கியால் சுடப்பட்டனர்.
அதில் மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சங்கர் ராணுவ மருத்துவமனையில் சவுதியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. சிறு காயம் அடைந்த பால்ராஜ், மணிகண்டன் ஆகியோரும் சிகிச்சை பெற்று தங்கியுள்ள இடத்துக்கு திரும்பிவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால், மீனவர் மாவீரன் உடலை இந்தியா அனுப்புவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாவீரனுக்கு நீலவேணி என்ற மனைவியும், தனுஷியா(17), தஷ்வந்த்(5) என இரு குழந்தைகள் உள்ளனர். இந்த தகவல் கிடைத்த 12.8.2026 முதல் மாவீரன் உடலை விரைவில் தமிழகம் கொண்டு வரவும், காயம் அடைந்தவர்களை தமிழகம் அழைத்து வரவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட கலெக்டர் மேற்கொண்டு வருகிறார். மீன்வளத்துறை செயலாளர், மத்திய வெளியுறவுத்துறை மூலம் தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சர் நாத்: கடந்த 2.7.2026 அன்று நிதித்துறை, மீன்வளத்துறை அமைச்சர்கள் தலைமையில் படகு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சென்னை மண்டல மீன்வள இணை இயக்குனர், உதவி இயக்குனர், படகு உரிமையாளர்களுடன், ஆந்திர மாநில மீன்வளத்துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி படகுகளை விடுவிக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 11.7.2026 அன்று இரு மாநிலங்களுக்கிடையேயான குழு கூட்டத்தில் சிறை பிடிக்கப்பட்ட சென்னை படகுகளை விடுவிக்க வலியுறுத்தப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, ஆந்திர மாநில அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம் வாயிலாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆந்திர மீன்வள ஆணையர் நெல்லூர் மாவட்ட கலெக்டருக்கும், ஆந்திர மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவும், ஆந்திர-தமிழக கடலோரப் பகுதிகளில் சுமுகமாக மீன்பிடிப்பில் ஈடுபட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.