நாளை நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா?
நாளை நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா?
சுதந்திர தின விழாவின்போது உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேசிய கொடியை ஏற்றும்முன் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என நீதிமன்ற பதிவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
Published : August 14, 2026 at 10:11 PM IST
By - சசிகுமார்
சென்னை: தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து 1970 ஆம் ஆண்டு முதல் பாடப்பட்டு வருகிறது. நீண்டகால மரபுப்படி, அரசு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கமாகும்.
இந்த சூழலில், தவெக தலைவர் ஜோசப் விஜய், மே 10 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற போது முதலில் வந்தே மாதரம் பாடலும், அதைத்தொடர்ந்து தேசிய கீதமும், இறுதியாக (மூன்றாவதாக) தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது தமிழ்நாட்டு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டின் மாண்பை சீர்குலைப்பதாக அரசியல் கட்சியினர் சிலர் விமர்சனம் செய்தனர்.
தொடர்ந்து, கடந்த ஜூன் 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநரின் உரையின்போது இரண்டு முறை தேசிய கீதமும், ஒரு முறை தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது மேலும் காரசாரமான விவாதங்களுக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக, ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேசிய கீதம் இரு முறையும், தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும் ஏன் பாடப்பட்டது? இது நம்முடைய கோட்டை. இந்த கோட்டையை ஆளுநருக்கு கொடுக்கும் அளவிற்கு என்ன சமரசம் நடைபெற்றது என மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்" என கடுமையாக விமர்சித்தார்.
இதன் பின்னரும் ஆளுநர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டு, இறுதியாகவே தமிழ்த்தாய் பாடப்பட்டது. குறிப்பாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துக் கொண்டபோது, விழாவின் தொடக்கத்தில் ஏற்கனவே பல்கலைக்கழகம் அறிவித்தபடி, 'வந்தே மாதரம்' பாடல் முதலில் பாடப்பட்டது. அதை அடுத்து, தேசிய கீதமும், கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது.
இந்த சூழலில்தான் கடந்த ஜூலை 9 ஆம் தேதி அன்று "வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாட வேண்டும்" என மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கை நிர்வாக உத்தரவாக செயல்படும் எனவும் அது அறிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாநில அரசுக்கும், மாநில பாடல் இருக்கும் நிலையில் மத்திய அரசின் இந்த சுற்றறிக்கைக்கு பலதரப்பட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் கலாச்சார உரிமைகளின் படி தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்பட வேண்டும்" என தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடி, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற மத்திய அரசுக்கு சொந்தமான அல்லது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் இனி நிகழ்ச்சிகள் நடத்தினால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், நாளை (ஆகஸ்ட் 15) நடைபெற உள்ள 80 ஆவது சுதந்திர தின விழாவின் போது, உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு முன் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என நீதிமன்ற பதிவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் சுற்றறிக்கை மற்றும் உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் இந்த அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்கள் அளித்த விரிவான விளக்கத்தை கீழே காணலாம்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீர சிவாஜி கூறுகையில், "சுதந்திர போராட்டத்தின் போது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடல், மக்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
சுதந்திரத்திற்கு பின், அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக உள்ள இந்தியாவில் ஒரு சமுதாயத்தினரை குறிப்பிடும் பாடலை மத சார்பற்ற இந்தியாவில் அனைவரும் ஏற்க வேண்டும் என கூறுவதை எப்படி ஏற்க முடியும்.
மத்திய அரசின் நிர்வாக உத்தரவை விட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் சட்டமன்றத்திற்கே அதிக அதிகாரம் உள்ளது. மாநில அரசின் இந்த தீர்மானம் பின்னர் அரசிதழில் வெளியிடப்பட்டு அனைத்து துறைகளுக்கும் அறிவிப்பாக அனுப்பப்படும்.
அதனால், மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு எந்த சட்ட அதிகாரமும் இல்லை என்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சாட்டமன்றத்தின் தீர்மானத்தின் படி தமிழ்தாய் வாழ்த்தை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பாட வேண்டியது கட்டாயமாகும்.
தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை மேலும் வலு சேர்க்கும் வகையில், சட்டமாக இயற்ற வேண்டும். மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்பதல் தான், மத்திய அரசு நிர்வாக உத்தரவாக பிறப்பித்துள்ளது" என தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குமரகுரு கூறுகையில், "மத்திய அரசின் சுற்றறிக்கையில் தேசிய பாடலுக்கு பின் தேசிய கீதம் பாட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரு பாடல்களுக்கும் இடையில் வேறு எந்த பாடலையும் பாட கூடாது என்பது மட்டுமே கூறப்பட்டுள்ளது.
அதனால், மாநில பாடலை முதலில் பாடுவதா? இறுதியில் பாடுவதா? என சுற்றறிக்கையில் குறிப்பிடாத போது, தமிழ்த்தாய் வாழ்த்து எப்போது பாட வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. மாநில அரசு விரும்பினால், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. மத்திய அரசின் அறிக்கையிலும் தடை விதிக்கவில்லை. மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடாத போது, சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டே இந்த விவகாரத்தில் அரசியல் செய்கின்றன" என தெரிவித்தார்.
இந்த சூழலில் நாளை 80 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.