நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்; தனியார் பஸ் உரிமையாளர்கள் அறிவிப்பு
சென்னை: 'கடந்த எட்டு ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படாதது, மகளிர் இலவச பயண அறிவிப்பு போன்றவற்றால், தனியார் பஸ் தொழில் முடங்கும் நிலை எற்பட்டுள்ளது. 'எனவே, பஸ் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி, நாளை ஒரு நாள் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது' என, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர் கள் சம்மேளனத் தலைவர் கே.தங்கராஜ், செயலர் டி.ஆர்.தர்மராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னையில், நேற்று அவர்கள் அளித்த பேட்டி: தமிழகத்தில், சென்னை, மதுரை, நாகர்கோவில், உதகை தவிர, மற்ற மாவட்டங்களில், மொத்தம் 7,000 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 104 ஆண்டுகளாக பயணியருக்கு, சிறப்பான சேவை அளித்து வருகிறோம். டீசல், உதிரி பாகங்கள் விலை, பல மடங்கு உயர்ந்த நிலையில், 2018ம் ஆண்டுக்கு பின், பஸ் கட்டணத்தை உயர்த்தாததால், தனியார் பஸ் தொழிலில், பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பயணியர் பஸ் கட்டணத்தை உயர்த்த, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த ஆண்டு மார்ச்சில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கட்டண உயர்வு தொடர்பாக, பஸ் உரிமையாளர்கள், பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, இலவச மகளிர் பயண திட்டத்திற்காக, அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் பஸ்களுக்கு மானியம் வழங்குவதில்லை. அதனால், அவை நஷ்டத்தில் இயங்குகின்றன.
பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்காவிட்டால், பஸ் தொழில் முடங்கி விடும். தற் போது, பஸ்கள் 65 சதவீதம் நஷ்டத்தில் இயக்கப்படுகின்றன.
மகளிர் இலவச பயண திட்டம், வரும் 2ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், தனியார் பஸ் நிலை மேலும் மோசமாகி விடும். எனவே இந்த இலவச பயண திட்டத்தை தனியார் பஸ்களுக்கும் விரிவுப்படுத்தி, மானியம் வழங்க வேண்டும்.
தனியார் பஸ் நிறுவனங்களை நம்பி, மூன்று லட்சம் ஊழியர்கள் இருக்கின்றனர். தினமும் பல லட்சம் பேர், தனியார் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். எனவே, தனியார் பஸ் தொழிலை காப்பாற்றும் வகையில், பஸ் கட்டணத்தையும், மகளிர் இலவச பயணத்தை, எங்களுக்கும் விரிவுபடுத்தி மாற்றி அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி, இன்று நள்ளிரவு 12:00 மணி முதல், நாளை நள்ளிரவு 12:00 மணி வரை, தனியார் பஸ்களை நிறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.